‘பினாங்கு இதய பாதுகாப்பு’ திட்டம் அறிமுகம்

Admin

பாயா தெருபோங் – பினாங்கு மாநிலத்தில் automated external defibrillator (AED) இயந்திரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஜார்ச்டவுன், சமூக அவசரநிலை உதவிக்குழு (CERT) ‘பினாங்கு இதய பாதுகாப்பு’ திட்டத்தைத் தொடங்க முன்முயற்சி எடுத்துள்ளது.

ஜார்ச்டவுன் CERT குழுத் தலைவர் ஓங் ஸ்வீ ஜின் கூறுகையில், மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து உடனடி முதலுதவி வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்பாடுக் காண்கிறது, என்றார்.

“இந்த முன்முயற்சியின் மூலம் மொத்தம் ஆறு வாகனங்களில் AED இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

“எனவே, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி வழங்க விரும்புகிறோம்.

“AED சிகிச்சைக்கான இயந்திரம் அது குறித்த பயிற்சி பெற்ற தரப்பினரால் அணுகப்படுகின்றன. அருகில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்த ஆறு வாகனங்களில் ஒன்று வரவழைக்கப்படும்.

“தற்போது, நான்கு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் ஆறு AED இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

“இத்திட்டத்தின் கீழ் விரைவில் 20 AED இயந்திரங்கள் அதிகரிக்க உத்தேசித்துள்ளோம்.

“சொந்த AED இயந்திரம் வைத்திருக்கும் நபர்கள் எங்களுடன் கைகோர்த்து, சமூகத்திற்கான ஆதரவை விரிவுபடுத்தவும், மேலும் பல உயிர்களைக் காப்பாற்றவும் ஒன்றிணைந்து செயல்பட முன் வர வேண்டும்,” என்று டேசா பெர்மாத்தா கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் திறப்பு விழாவின் போது ஓங் தனது உரையில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் இயோவ் சூன் ஹின், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென் மற்றும் பினாங்கு பாதுகாப்பு சங்கத் (PHSS) தலைவர் டத்தோ டாக்டர் லுவா லீன் வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜார்ச்டவுன் சமூக அவசரநிலை உதவிக்குழு (CERT) முன்முயற்சியை இயோவ் பாராட்டினார்.

“தற்போது, பினாங்கில் 160 AED இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் சில நிறுவனங்களால் நிறுவப்பட்ட AED இயந்திரங்களின் எண்ணிக்கை பட்டியலிடப்படாததால் அதன் எண்ணிக்கை நிச்சயமாக இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும்.

“பினாங்கு அரசாங்கம், பொது-தனியார் கூட்டமைப்பு மூலம் மாநிலத்தில் அதிகமான AED இயந்திரங்களை நிறுவுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

“பினாங்கு வாழ் மக்களுக்கு சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க இது அவசியம்,” என்று அவர் கூறினார்.