பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு ரிம130,000 மானியம்

Admin

பாகான் – மாநில இரண்டாம் துணை முதலமைச்சரும் பினாங்கு மாநில இந்து வறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி நேற்று (14/6/2023) பினாங்கு இந்திய பூப்பந்து சங்கத்திற்கு (PIBA) ரிம100,000.00 மதிப்புள்ள ஒரு மாதிரி காசோலையை வழங்கினார்.

மேலும், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான சத்தீஸ் முனியாண்டி அவர்களும் இந்தப் பூப்பந்து அரங்கம் நிர்மாணிப்புத் திட்டத்திற்கு உதவும் வகையில் ரிம30,000-ஐ நிதியுதவியாக வழங்கி சிறப்பித்தார்.

பட்டர்வொர்த், தாமான் பாகானில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட PIBA பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கத்தில் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பினாங்கு மாநிலத்தில் இன பாகுப்பாடு இன்றி அனைத்து சமூகத்தினரும் பூப்பந்து துறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் மாநில மற்றும் தேசிய ரீதியிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் PIBA முன்முயற்சியில் பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கம் நிர்மாணிக்கப்பட்டது.

PIBA வெளிநாட்டில் இருந்து அனைத்துலக தரம் கொண்ட பயிற்சியாளர்களின் வழிகாட்டலில் பயிற்சிகள் வழங்கி சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வித்துடுவதாக அறியப்படுகிறது.

இந்த பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்க அரங்கத்தில் ‘பூப்பந்து கோர்ட்’, வாகன நிறுத்துமிடம், PIBA அலுவலகம், சந்திப்புக் கூட்ட அறை மற்றும் முக்கிய பொது வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பாகானில் இதுவே முதல் இந்திய விளையாட்டு அரங்கமாகத் திகழ்கிறது.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரிகிருஷ்ணசாமி, பினாங்கு இந்தியர் பூப்பந்து சங்கத்(PIBA) தலைவர் துரைராஜு முனியாண்டி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

PIBA பினாங்கு இந்தியர் பூப்பந்து விளையாட்டு அரங்கம் வருகின்ற ஜூன்,17-ஆம் நாள் அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்க விழாக் காணும்.