ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வசதி குறைந்த 17 இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கியது.
மாண்புமிகு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் பினாங்கு இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் மாணவர்களுக்கான இந்த காசோலையை வழங்கி சிறப்பித்தார்.
இந்த ஆண்டுக்கான தொடக்கமாக இத்திட்டத்தின் கீழ் 17 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேவேளையில், இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு இத்திட்டம் தொடர்ந்து வழிநடத்தப்படும் என செனட்டர் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 318 மாணவர்கள் நன்மைப் பெறும் வகையில் ரிம376,250 நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜனவரி மாதம் உயர்கல்வித் துறையில் சான்றிதழ் கல்வியைத் தொடரும் 3 பேருக்கு தலா ரிம500, டிப்ளோமோ கல்வி தொடரும் ஏழு பேருக்கு தலா ரிம800, பட்டப்படிப்புத் தொடரும் ஏழு மாணவர்களுக்கு தலா ரிம1,000 வழங்கப்படுகிறது.
மாணவர்களின் ஒவ்வொரு விண்ணப்பமும் நன்கு பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகிறது என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பினாங்கில் பிறந்து பினாங்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் அல்லது பினாங்கில் பதிவு செய்யப்பட்டு பினாங்கில் வசிக்கும் வாக்காளர் பெற்றோர்கள் இந்தக் கல்வி நிதி உதவியைத் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற முடியும். தகுதி உள்ள எல்லா விண்ணப்பதாரர்களும் இந்த கல்வி நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய அழைக்கப்படுகிறார்கள்.
பினாங்கு கொம்டார் கட்டிடத்தின் 30 வது மாடியில் இயங்கி வரும் பினாங்கு இந்து அறவாரியத்தைத் தொடர்பு கொண்டு நிதி உதவி பெறலாம் அல்லது www.hebpenang.gov.my என்ற அகப்பக்கத்தின் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம் என அவர் மேலும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கலந்து கொண்டார்.