பாயான் லெப்பாஸ் – கடந்த சனிக்கிழமை கத்தாரில் நடைபெற்ற ஆசிய அனைத்துலக சிலம்பம் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை வெற்றிப் பெற்ற மலேசிய சிலம்பம் அணி, குறிப்பாக பினாங்கு விளையாட்டு வீரர்கள், இன்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் கம்பீரத்துடன் தாயகம் திரும்பினர்.
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் போட்டியாளர்களை வென்றதன் மூலம், அணியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
இந்த ஆறு விளையாட்டு வீரர்களை மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு வரவேற்றனர்.
பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (MSN) இயக்குனர் ஹாரி சாய், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், செனட்டரும் இந்து அறப்பணி வாரியத் துணைத் தலைவருமான டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் அறப்பணி வாரிய ஆணையர் டத்தோ தினகரன் ஆகியோரும் கலந்து கொண்டு வீரர்களை வரவேற்றனர்.
விளையாட்டு வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நாடு திரும்பிய வீரர்களை அரவணைத்து, அவர்களுக்குப் பாராட்டுச் சின்னமாக பூங்கொத்துகளை வழங்கினர்.
ஆறு பேர் கொண்ட பினாங்கு சிலம்பம் அணியினர் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்தனர். சாஸ்திவேனா (தனித்திறமை – 17 வயதுக்குட்பட்ட, போர் – 55 – 65கி.கி), கவித்திரா (தனித்திறமை – 15 வயதுக்குட்பட்ட, போர் – 45-55 கி.கி), தர்னிஷா (தனித்திறமை – 15 வயதுக்கு கீழ், போர் 55-65 கி.கி), ரனிஷா (தனித்திறமை – 15 வயதுக்குட்பட்ட, போர் – 70 கி.கி மேல்), லீனாஸ்ரீ (தனித்திறமை – 15 வயதுக்குட்பட்டோர், போர் – 30 – 40 கி.கி) மற்றும் பிரகாஷ் (தனித்திறமை – திறந்த ஆண் பிரிவு, போர் – 60 கி.கி மேல்) ஆகியோர் 12 தங்கப் பதக்கங்களை வென்று குவித்தனர்.
சிலம்பம் மற்றும் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை ஆதரிப்பதில் பினாங்கு மாநிலத்தின் அர்ப்பணிப்பைக் குறிப்பிட்டு, அதன் சாதனைகளுக்காக இக்குழுவைப் பாராட்டினார்.
“அடுத்த ஆண்டு பினாங்கு ஒரு அனைத்துலக சிலம்பம் போட்டியை நடத்தும் என்பதால், எங்கள் பினாங்கு வீரர்கள் இந்த வாய்ப்பினை நன்குப் பயன்படுத்திக் கொண்டு தேசிய அணிக்கு வெற்றி வாகைச் சூடுவர் என்று நம்புகிறேன்.
இப்போட்டியில் பங்கேற்க இந்த அணிக்கு நிதியுதவி அளித்த சுந்தராஜு, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
“போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு அவர்கள் நாடி நிதியுதவி கோரினர். நான் அவர்களை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் தங்கப் பதக்கம் பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைத்ததால், அவர்களை வாழ்த்துவதற்காக நான் தனிப்பட்ட முறையில் இங்கு வருவதற்கு முற்பட்டேன்,” என்று சுந்தராஜு கூறினார்.
புக்கிட் மெர்தாஜாமில் ஒரு புதிய பயிற்சி இடத்தை ஒதுக்குவது உட்பட சிலம்பத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சாய் உறுதியளித்தார்.
“சரவாக் சுக்மாவில் சிலம்பப் போட்டியில் மூன்று தங்கங்கள் பெறப்பட்டன. இந்த எண்ணிக்கை 2026 சுக்மாவில் உயர்த்துவோம்,” என்று சாய் கூறினார்.
மலேசியா சிலம்பம் சங்கத்தின் (எம்.எஸ்.ஏ) தலைவர் டாக்டர் எம்.சுரேஸ், அந்த அணியுடன் தோஹாவுக்குச் சென்றார். இந்த அணி ஆறு தங்கங்களை வெல்லும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், இருப்பினும் ஆனால் அவர்கள் இரட்டிப்பாக்கியதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
“இந்தப் போட்டியின் போது எங்கள் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர், ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருந்தனர். இறுதியில், எங்கள் ஆறு வீரர்களும் தலா இரண்டு தங்கங்களை வென்றனர். அடுத்த ஆண்டு பினாங்கு நடத்தும் அனைத்துலகப் போட்டியில் இந்தச் சாதனையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று டாக்டர் சுரேஸ் கூறினார்.
மேலும், சிலம்பம் பயிற்சியாளர் இரவீந்திரன் பூங்காவண்ணம் தம் அணியின் கடுமையான பயிற்சி முறை மற்றும் அவர்களின் வெற்றிக்கான ‘தனித்திறமை’ (artistic staff spinning) மற்றும் ‘பொருத்தல்’ (போர்) பிரிவுகளில் கவனம் செலுத்தினர்.
“எனது விளையாட்டு வீரர்கள் வாரத்திற்கு ஐந்து முறை போட்டிக்காக மிகவும் கடினமாக பயிற்சி எடுத்தனர். அவர்களின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது,” என்றார் இரவீந்திரன்.
அணித் தலைவர் பிரகாஷ் இரவீந்திரன் ஜூலையில் சிலாங்கூரில் நடந்த முதல் அனைத்துலகப் போட்டி சந்திப்பிலும் ஆகஸ்ட் மாதம் சரவாக் சுக்மாவிலும் பெற்ற மதிப்புமிக்க படிப்பினைகளையும் நினைவுக்கூர்ந்தார்.
“நாங்கள் ஆசிய சாம்பியன்ஷிப்பிலிருந்து புதிய நுட்பங்களை நிறைய கற்றுக்கொண்டோம். என்னைப் பொறுத்தவரை, எனது கடினமான சவால் இந்தியாவைச் சேர்ந்த எனது எதிர் போட்டியாளரிடமிருந்து வந்தது.
“அடுத்த ஆண்டு பினாங்கில் நடைபெறும் அனைத்துலகப் போட்டிக்கு, மற்ற நாடுகள் சிறப்பாக தயாராகி வருவதால், நாங்கள் இன்னும் அதிகமான பயிற்சிகளை மேற்கொள்வோம்,” என்று பிரகாஷ் கூறினார்.