பினாங்கு தேக்-டோம் (Tech-Dome Penang) திட்டம் துவங்கப்பட்டது.

பினாங்கு தொழில்நுட்பம் மையம் பெர்ஹாட் மற்றும் பினாங்கு மாநில அரசும் இணைந்து தேக்-டோம் (Tech-Dome Penang) எனும் தொழில்நுட்ப மையத்தை நிர்மாணிக்கவுள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள். தேக்-டோம் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு மையமாகும். வளர்ந்து வரும் மாணவர்களிடையும் மற்றும் பொதுமக்கள் இடையே அறிவியல் மற்றும் கணித புலமையின் வழி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையமாக இது நிறுவப்படவுள்ளது. ஒரே இடத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய வடிவமைப்பு மற்றும் படைப்புகள் பற்றி மாணவர்களிடையே தூண்டலை ஏற்படுத்தவும் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

படம்: செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் இதர பிரமுகர்கள்.
படம்: செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் இதர பிரமுகர்கள்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் இத்திட்டம் ரிம 23.2 மில்லியன் செலவில் கட்டப்படவுள்ளதாக அறிவித்தார். முதல்கட்டமாக, கடந்தாண்டு பினாங்கு மாநில அரசு பினாங்கு மேம்பாட்டு கழகத்தின் வழி ரிம 1.15 மில்லியன் இத்திட்டத்தை துவக்குவதற்காக வழங்கியது. மேலும், மீண்டும் பினாங்கு மாநில அரசு ரிம 4 மில்லியன் மொத்தமாக ரிம 5.15மில்லியனை இத்திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளதாக மேதகு லிம் குவான் எங் கூறினார். இத்தேக்-டோம் திட்டத்தின் வழி மலேசியர்களிடையே உள்ள அறிவியல் கல்வியறிவு மற்றும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். எதிர்க்காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் குடும்பங்களுக்கென்று சிறப்பு திட்டங்கள் இம்மையத்தில் நடத்தப்படவுள்ளது. இதன்வழி, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஒரு உயர் தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் எதிர்காலத்தில் செழித்து தேவையான திறன்களை கற்றுதேர முடியும் என்பது மாநில அரசின் நம்பிக்கையாகும்.

மாநில அரசு ஏற்கனவே கர்பால் சிங் கற்றல் மையத்தை கம்போங் புவா பாலா இடத்தில் அமைத்துள்ளது. மேலும், ஒரு மையம் புக்கிட் மெர்தாஜாமில் அமைக்கவிருப்பதாக அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்கள்.