டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில 80 விழுக்காடு பராமரிப்பு நிதியத்தின் (TPM80PP) கீழ் 233 பராமரிப்பு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரிம33.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.
உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினரான ஜெக்டிப் சிங் டியோ இந்த 233 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட 386 பராமரிப்பு திட்டங்களை உள்ளடக்கியது என்றார்.
இந்த ஒவ்வொரு திட்டங்களும் தரவரிசை பின்பற்றி ஒப்புதல் வழங்கப்படும், குறிப்பாக மின்தூக்கி, நீர் தொட்டி மற்றும் கூரை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என விளக்கமளித்தார்.
“இந்நிதியம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்கு மாநில அரசு 80 விழுக்காடு செலவினம் ஏற்றுக்கொள்ளும் வேளையில் கூட்டு மேலாண்மை நிறுவனம் (ஜேஎம்பி) மற்றும் குடியிருப்பாளர்களால் மீதமுள்ள 20 விழுக்காடு செலவினம் ஏற்கப்படும்,” என ஜெக்டிப் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
பெங்காலான் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென், ஆர்.எஸ்.என் இராயர் (ஜெலுந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்), அய்னுல் ஃபதிலா சம்சுடி (மாநில செயலாளர் அலுவலகத்தின் வீடமைப்புப் பிரிவின் மூத்த உதவி செயலாளர்) மற்றும் பி.குமாரசாமி (தாமான் சூன் பூன் கீ குடியிருப்பாளர் சங்கத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு நீர் தொட்டிகள் புதியதாக மாற்றுவதற்கு ரிம 90,560 நிதி ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். இப்பராமரிப்புத் திட்டம் மேற்கொள்ள மாநில அரசி 80 விழுக்காடு நிதியும் (ரிம90,560) மீதமுள்ள நிதியை அக்குடியிருப்பாளர்கள் வழங்குவர் என தெளிவுப்படுத்தினார்.
“கூட்டு மேலாண்மை நிறுவனம் அல்லது குடியிருப்பாளர்கள் சங்கம் குடிமக்களிடம் இருந்து பராமரிப்புப் பணிக்கான நிதியை வசூலிக்க வேண்டும், எனினும் இச்செயலுக்கானப் பொறுப்பு குடியிறுப்பாளர்களிடம் இருந்தே தொடங்குகிறது,” என்றார்.
இந்த நீர் தொட்டி மாற்றும் திட்டம் சுமார் 12 வாரங்களில் தொடங்கி ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பராமரிப்புத் திட்டத்தைத் தவிர்த்து, தாமான் சூன் பூன் கீ குடியிருப்புக்கு 2014-ஆம் ஆண்டில் மின்தூக்கி பராமரிப்பதற்கும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதில் சுவர் அமைப்பதற்கும் TPM80PP நிதியம் மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது.