பினாங்கு மாநிலத்தின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் வகுப்புகள் அமைக்கத் திட்டம்.

மக்கள் கூட்டணி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளைச் சிறந்த முறையில் பராமரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்டுதோறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம1.75 மில்லியன் மானியம் வழங்கும் பினாங்கு மாநில அரசு பல தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கி புத்துயிர் பெறச் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்குத் தக்கச் சான்றாக விளங்குவது அஸாத் தமிழ்ப்பள்ளியாகும்.

பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 16 தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே பாலர் வகுப்புகள் செயற்படுகின்றன. அதன்பொருட்டு எஞ்சிய அனைத்துப் பள்ளிகளிலும் இப்பாலர் வகுப்புகள் அமைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் மாக்மண்டின் தமிழ்ப்பள்ளிக்கு வருகை மேற்கொண்ட பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். அதன் தொடக்க முயற்சியாகக் கடந்தாண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப்பள்ளிகளில் பாலர் வகுப்புகளின் அமைப்பிற்கு மாநில அரசு  ரிம100,000 மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மாக்மண்டின் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு ஒரு லட்சம் வெள்ளியை மானியமாக வழங்குவதாகக் கூறினார். இந்நிதியினை அப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுமாறு வலியுறுத்தினார். முதல்வர் மேதகு லிம் குவான் எங் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அயராது உழைப்பால் கட்டப்பட்ட பாலர்பள்ளியைக் கடந்த  2 பிப்ரவரி 2013-ஆம் நாள் காண வந்த தருணத்தில் இதனைத் தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளில் 16 பள்ளிகளில் மட்டுமே பாலர் வகுப்புகள் இருப்பதாகவும் எஞ்சிய 12 பள்ளிகளிலும் கூடிய விரைவில் பாலர் வகுப்பு நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் விடா முயற்சியின் பலனாக இன்று மாக்மண்டின் தமிழ்ப்பள்ளியில் பாலர்பள்ளி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாணவர்களின் கல்வியில் கொண்ட அக்கறையினைப் பாராட்டிப் பேசினார்..

 

 526602_599100953440692_152664107_n

பினாங்கு முதல்வர் வாக்குறுதி அளித்தபடி கடந்த பிப்ரவரி 13-ஆம் திகதி மாக்மண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முதல்வருக்காகச் செய்த வாழ்த்து அட்டையுடன் நிற்கும் பாலர் பள்ளி மாணவர்களுடன் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, முதல்வர் லிம் குவான் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் திரு லிம் ஹோக் செங், மாக்மண்டின் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு கணேசன்.