கடந்த ஐப்பசி திங்கள் 29/10/2016-ஆம் நாள் உலகத்தில் வாழும் அனைத்து இந்தியர்களும் விமரிசையாக இத்திருநாளைக் கொண்டாடினர். பினாங்கு மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் தொகுதிகளில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தினர். பண்டிகை காலங்களில் வெளிப்படும் சிறந்த நல்லிணக்கத்தைக் கொண்டு ஒன்றுப்பட்ட சமூகமாக இந்திய சமூகத்தினர் வாழ இம்மாதிரியான உபசரிப்புகள் ஊன்றுகோளாக திகழும் என்பது வெள்ளிடைமலை.
கனத்த மழை பெய்த போதிலும் பிறை தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள பொது மக்கள் தவறவில்லை. திரளாக வந்த பொது மக்களின் கூட்டம் பெலிதா உணவகத்தின் அறுசுவை உணவு பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர். மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக உபசரிப்பைத் துவக்கி வைத்தார். மேலும், நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு தீபாவளி பண அன்பளிப்பைப் பேராசிரியர் எடுத்து வழங்கினார்.
பினாங்கு மாநில மேம்பாட்டுக் கழக(பிடிசி) ஏற்பாட்டில் திறந்த இல்ல உபசரிப்பு கடந்த 10/11/2016-ஆம் நாள் பிடிசி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய மாநில முதல்வர் செபராங் பிறை நகரை உருமாற்றும் முயற்சியில் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்துள்ளதை குறிப்பிட்டார். பினாங்கு மேம்பாட்டுக் கழகம் பத்து கவானில் அதிகமான முதலீட்டாளர் முதலீடுச் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், சுங்கை பவுங் பகுதியில் 185 ஏக்கர் நிலத்தில் மரச்சாமான்கள் உட்படுத்திய தொழிற்பேட்டையை அமைக்க திட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
“தீபத் திருநாள் திறந்த இல்ல உபசரிப்பு” என்ற கருப்பொருளுடன் டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு ஜெக்டிப் சிங் டியோ உபசரிப்பு நிகழ்வு நடத்தினார். மெத்தடிஸ் (ஆண்) பள்ளி மண்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் 800-க்கும் மேற்பட்ட பல இன மக்கள் கலந்து கொண்டு உபசரிக்கப்பட்ட இந்திய பாரம்பரிய உணவு மற்றும் பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர். மேலும், ஆதரவற்ற குழந்தைகளும் பிரத்தியேகமாக கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் இவ்வாண்டு தீபாவளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிக்குறைந்த 60 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசுக்கூடை எடுத்து வழங்கினார். இதனை ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்தாற்போல் செய்து வருவது பாராட்டக்குரியதாகும். இவ்வாண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் பரிசுக்கூடை வழங்கியது வரவேற்கத்தக்கது
மேலும் பினாங்கு மாநிலத்தில் அரசு சார்பற்ற பல இயக்கங்களும் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வை நடத்தி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் ஆசிரமங்களுக்கு அன்னதானம் வழங்குவதோடு மட்டுமின்றி நன்கொடையும் வழங்கி சிறப்பிக்கப்படுவது சாலச்சிறந்தது.