பாகான் டாலாம் –தொழிலதிபரான டத்தோ ஸ்ரீ ஆர்.அருணாசலம் தனது நற்பணிக் குழுவினர் ஒத்துழைப்புடன் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மூக்குக்கண்ணாடியை இலவசவாக வழங்கினார். கடந்த 39 ஆண்டுகளாக சமூகப் பணியில் ஆர்வம் காட்டிவரும் இந்த நற்பணிக் குழுவினர் 8-வது முறையாக பாகான் டாலாம் தொகுதியில் வாழும் வசதி குறைந்த பெரியோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் டத்தோ ஸ்ரீ ஆர்.அருணாசலத்தின் சமூக சேவையைப் பாராட்டினார். இனம், மொழி பாராமல் அனைத்து தரப்பினருக்காக ஏற்பாடுச் செய்துள்ள இந்நிகழ்வினைக் கண்டு மனம் மகிழ்ந்தார். டத்தோ ஸ்ரீ ஆர்.அருணாசலத்தின் சேவை பணியை அவரது தலைமுறையினரும் தொடர்ந்து ஆற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இறைவன் நமக்கு அளித்த ஐம்புலன்களில் கண்மிக அத்தியாவசியமாக கருதப்படுகிறது. கண் இல்லை என்றால் நம்முடைய அடிப்படை வேலைகளைக் கூட சரிவர மேற்கொள்ள முடியாது. எனவே வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த கண் பார்வைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக டத்தோ ஆர்.அருணாசலம் கூறினார். குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர், மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் ஆகியோரின் நலனில் முழுக் கவனம் செலுத்தி இனம், மதம் பேதமில்லாமல் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்திஸ், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ, பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் லிம் ஹொக் செங் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அண்மையக் காலமாக கண் பார்வை குன்றியிருந்தும் மூக்குக்கண்ணாடி வாங்குவதற்கு பணச்சிக்கல் எதிர்நோக்கிய திருமதி பிரம்மா, 50 உதவிக்கரம் நீட்டிய இந்நற்பணிக் குழுவிற்கு நன்றி கூறினார். மூக்கு கண்ணாடியின் உதவியோடு தனது அன்றாட வாழ்க்கையை மேலும் சிறப்பாக வழி நடத்த இயலும் என முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கிய நற்பணிக் குழுவினர் போன்று பினாங்கில் பிற அரசு சாரா இயக்கங்களும் பல சமூகச் சேவை வழங்கி பொது மக்களுக்கு நன்மை அடைய வழிவகுக்கும் செயல் பாராட்டக்கறியது என ஸ்ரீ மாரியம்மன், பட்டர்வொர்த் மண்டபத்தில் நடைபெற்ற இலவசமாக மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் முதல்வர் குறிப்பிட்டார்