பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு தேசிய கணகாய்வுத் துறையின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றதாக அதன் தலைமை இயக்குநர் எம்.இராமசந்திரன் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இந்து அறப்பணி வாரியம் நிலம், சொத்துடைமை, கட்டடங்கள், வீடுகள், இடுகாடுகள், கோவில்கள் என அனைத்தையும் பராமரித்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை இந்திய மாணவர்கள் கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் குடும்பங்களின் சுகாதார நிதி பிரச்சனைக்கு வழங்கப்படுவது வெள்ளிடைமலையாகும்.
எனவே, இவ்வாரியத்தின் வரவுச்செலவு கணக்கு அனைத்தும் எவ்வித குழப்பமுமின்றி அதன் அறிக்கை தெள்ளத் தெளிவாக இருப்பதை தேசிய கணக்காய்வு துறையினர் பாராட்டி கடந்த 28 ஆகஸ்டு அன்று சான்றிதழ் ஒன்றை வழங்கியதைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார் இரண்டாம் துணை முதல்வரும் அவ்வாரிய தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி. இந்து அறப்பணி வாரிய கணக்கு விவரங்கள் முறையாக தக்க வைப்பதில் தொடர்ந்து அவ்வாரிய செயலவை உறுப்பினர்கள் விவேகத்துடன் பாடுப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாகம் பற்றி பொறுப்பற்ற சில தரப்பினர் கேள்வி எழுப்பியதற்கு இச்சான்றிதழ் தக்க சான்றாக அமையும் என்பது பாராட்டக்குறியதாகும்.பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை என்ற பினாங்கு மாநில கோட்பாட்டில் இந்து அறப்பணி வாரியம் சிறந்த சேவையை பினாங்கு வாழ் இந்தியர்களுக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என அதன் நிர்வாகத் தலைவர் தெரிவித்தார்.