பினாங்கு மாநில 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

நடந்து முடிந்த 13ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த வேளையில் கடந்த 28-6-2013-ஆம் நாள் பினாங்கு மாநில முதலாம் தவனைக்கானச் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.

முதல் அங்கமாக  மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், புக்கிட் தம்பூன் சட்ட மன்ற உறுப்பினர் லாவ் சூ கியாங்கை சட்ட மன்ற சபாநாயகராக முன்மொழிய மாநில துணை முதல்வர் ரசீட் அஸ்னோன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து லாவ் சூ கியாங் போட்டியின்றி சட்டமன்ற சபாநாயகராகப் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். துணை சபாநாயகராக சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாஸ் மொக்தார் ஹஜி சாபி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் பதவிப் பிரமாணம் எடுத்து, பதவியேற்பு சடங்கைத் தொடக்கி வைத்தார்.

மாநில சட்டமன்றத்தின் செயலாளரான மகேஸ்வரி மலையாண்டி, கூட்டத்தை முறையாக வழி நடத்தி சபாநாயகரிடம் ஒப்படைத்தப் பிறகு மாநில முதல்வர் லிம்  குவான் எங் சபாநாயகரின் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 30 மக்கள் கூட்டணி உறுப்பினர்களும் 10 தேசிய முன்னணி உறுப்பினர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  பினாங்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் சித்தி சஹாரா அமீட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பினாங்கு மாநிலத்தில் 40 சட்டமன்ற தொகுதிகள் உட்பட 13 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. முதல் தவனைக்கான கூட்டத்தொடரில் 5 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டது பாராட்டக்குறியதாகும். பிறை சட்டமன்ற உறுப்பினர் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி, டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு நேதாஜி இராயர், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயபாலன் என ஐந்து இந்திய பிரதிநிதிகளும் அவர்தம் சட்டமன்ற பதவிக்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

1-7-2013 முதல் 5-7-2013-ஆம் நாள் வரை நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் பொருட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆயுத்த நிலையில் இருக்கவும் சட்டமன்ற விதிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.

பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் ப இராமசாமி அவர்கள் இரண்டாம் முறை தேர்வுப் பெற்றதைத் தொடர்ந்து மாநில கல்வி நலனுக்காகப் பல ஆக்ககரமானத் திட்டங்கள் அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதி தலைவரான  திரு நேதாஜி இராயர் தாம் இரண்டாம் தவனைக்கானச் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி அகம் மகிழ்ந்தார். ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியில் ஏற்படும் அதிகமானக் குற்றச்செயல்களைக் களைவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியின் பொது வசதிகளையும் மேம்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்றார்.

ஜூலை 2-ஆம் நாள் காலை மணி 9.30 மணிக்கு மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் ஹஜி அபாசின் வருகையைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாநில ஆளுநரின் தொடக்க உரையுடன் சட்டமன்றம் இனிதே துவங்கியது. மாநில ஆளுநர் தமது உரையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டார். மேலும், மாநில அரசு ஆற்றல், பொறுப்பு, வெளிப்படை என்ற கொள்கையுடன் பினாங்கு மாநிலத்தை அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடுவதற்கு வழிவகுக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

1-7-2013 முதல் 5-7-2013-ஆம் நாள் வரை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களின் நலன் கருதி பல துறைகளில் குறிப்பாகப் பொருளாதார அடிப்படையில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டது.

மதிப்பிற்குறிய திரு ஜெக்டிப் சிங் டியோ, மதிப்பிற்குறிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மதிப்பிற்குறிய திரு தனசேகரன், மதிப்பிற்குறிய திரு நேதாஜி இராயர், மதிப்பிற்குறிய திரு ஜெயபாலன் ஆகியோர் சட்டமன்ற பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். (இடமிருந்து வலம்)
மதிப்பிற்குறிய திரு ஜெக்டிப் சிங் டியோ, மதிப்பிற்குறிய இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மதிப்பிற்குறிய திரு தனசேகரன், மதிப்பிற்குறிய திரு நேதாஜி இராயர், மதிப்பிற்குறிய திரு ஜெயபாலன் ஆகியோர் சட்டமன்ற பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். (இடமிருந்து வலம்)