மலேசிய பிரிமா வாரியம் பினாங்கில் 29 பிளாக் கொண்ட மலிவு விலை வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. ஒவ்வொரு யூனிட் வீட்டு விலை ரிம510,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாடா குருத்வாரா சாயிப் ஆலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ, கோலா சுங்கை பினாங்கு, பாலிக் புலாவ் பகுதியில் அமைந்திருக்கும் 207.57 ஏக்கர் நிலத்தில் 9,904 யூனிட் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ள பிரிமாவின் விண்ணப்பம் பெறப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
பிரிமா விண்ணப்பத்தில் 25 அடுக்குமாடி கட்டிடங்களில்(பிளாக்) 27 மாடிகளும் மற்றும் 4 அடுக்குமாடி கட்டிடங்களில் 23 மாடிகளும் இடம்பெறுவதோடு மாநில அரசு நிர்ணயித்துள்ள ரிம300,000 விலையை விட கூடுதலாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியதாகத் தெரிவித்தார்.
“விண்ணப்பத்தில் 9,904 யூனிட் மலிவு விலை வீடுகளில் 3,168 யூனிட் வீடுகளின் விலை ரிம467,000 முதல் ரிம510,000 வரையிலும் , மீதமுள்ள 6,736 யூனிட் வீடுகள் ரிம190,000 முதல் ரிம290,000 வரையிலும் அதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பிரிமா திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரிம190,000 மற்றும் ரிம290,000 விலையிலான வீட்டு விலை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ரிம 300,000 விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட 3,168 யூனிட் வீடுகளின் விலை ஏற்றுகொள்ள முடியாது. இக்கூற்று மாநில அரசாங்கத்தின் மலிவு விலை வீடமைப்புத் திட்ட கொள்கைக்குப் புறம்பாக இருக்கிறது. பாலிக் புலாவில் 29 மாடி கட்டிடம் கட்டுவது மிகவும் ஆபத்தானது என்றும், பிரிமா மாநில அரசின் வீடமைப்பு வழிகாட்டலை பின்பற்றவில்லை என நிருபர்களிடம் தெரிவித்தார்.
பிரிமா அதிகாரிகள் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் விலை மற்றும் கட்டிட உயரத்தை பற்றிய மறு ஆய்வுச்செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பிரிமா வீடமைப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை, ஆனால் மேம்பாட்டுத் திட்டத்தை மறுபரிசீலனைச் செய்யுமாறுக் கேட்டுக் கொண்டார் திரு ஜெக்டிப்.}