செபராங் ஜெயா – மத்திய அரசின் ரிம24 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை கட்டுமானத் திட்டம் இந்த செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் (KPKT), ங்கா கோர் மிங் கூறுகையில், இத்திட்டம் நிறைவடைய சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இது முடிவடைந்தவுடன் பினாங்கு மாநிலத்திற்கு ஒரு புதிய அடையாளமாகத் திகழும், என்றார்.
“இருப்பினும், புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை மேம்பாட்டுத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் மலேசியா வருகை 2026 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை நிறைவுச்செய்ய முடியும்.
“இத்திட்டம் பிரதான கட்டிடம், மூடப்பட்ட பகுதிகள், பாதசாரிகள் கடக்கும் இடங்கள், சிறந்த உள்கட்டமைப்பு, அதிக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான ஐந்து கூறுகளைக் கொண்டிருக்கும்.
“இந்தத் திட்டம் முழுமையாக முடிக்கப்படுவதை உறுதிசெய்ய எம்.பி.எஸ்.பி கடினமாக உழைக்கும் என்றும் புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தையில் உள்ள 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பயனடைவார்கள் என்றும் நம்புகிறேன்.
“இந்த புதிய மைல்கல் முடிவடைந்தவுடன், இது நாட்டின் மற்றொரு சுற்றுலா அம்சமாக மாறும் குறிப்பாக மலேசியா வருகை ஆண்டு 2026-இல் சிறப்பு அம்சமாக திகழும்,” என எம்.பி.எஸ்.பி வளாகத்தில் நடைபெற்ற புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை வடிவமைப்பு போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும், உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெசன் எங் மோய் லாய்; இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென்; KPKT பொதுச் செயலாளர், டத்தோ வீரா முகமட் நூர் அஸ்மான் தைப்; மச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர், லீ கை லூன்; எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ அசார் அர்ஷாத்; PAM தலைவர், அபு ஜரீம் அபு பக்கர் மற்றும் பலர் இடம்பெற்றனர்.
செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் மலேசிய கட்டிடக் கலைநிபுணர்கள் சங்கம் (PAM) இணைந்து ஏற்பாடு செய்த வடிவமைப்புப் போட்டியின் மூலம் புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தையின் வடிமைப்பு நிர்மாணிக்கப்பட்டது. இது நாட்டிலேயே இம்முறையை பின்பற்றிய முதல் பொதுச் சந்தை என்று கோர் மிங் கூறினார்.
“இது நம் நாட்டில் பொது உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும். முதல் முறையாக ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கு இடையே திறந்த பொதுச் சந்தையை நிர்மாணிப்பதற்கான சிறந்த வடிவமைப்பைப் பெறுவதற்காக இப்போட்டி நடைபெற்றது.
“இரண்டு மாதங்களுக்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 75 பங்கேற்புகளை ஈர்க்க முடிந்தது. இறுதியாக 10 வெற்றியாளர்கள் மிகவும் தீவிரமான, வெளிப்படையான மற்றும் திறந்த திரையிடல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“இந்த யோசனை சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வெற்றியாளருக்கு இந்த திட்டத்திற்கான ஆலோசகராக பொறுப்பு வழங்கப்படுகிறது.
“புதுமையான முன்முயற்சிகளுடன் மலேசிய மடானி அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பதையும், பொது உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும், மக்களின் சமூகநலனையைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என்பதையும் இத்திட்டம் நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள பொதுச் சந்தைகளை மேம்படுத்த KPKT சிறப்பு நிதியாக ரிம110 மில்லியனை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இன்று முதல் புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தை போன்ற புதிய பெரிய அளவிலான பொதுச் சந்தையின் எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் திறந்த வடிவமைப்புப் போட்டி வடிவிலான அதே செயல்பாட்டு முறையைப் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.
“அடுத்த 10 ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள பொதுச் சந்தைகள் அவற்றின் சொந்த அம்சங்களைக் கொண்டிருக்கும், அவை சிறப்பு, வசதியான மற்றும் சுற்றுலாத் தலங்களாக உருவாக்கப்படும் திறன் கொண்டவை,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மூய் லைய் தனது உரையில், 1970 களில் கட்டப்பட்ட புக்கிட் மெர்தாஜாம் பொதுச் சந்தையை மீண்டும் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்வதற்காக ரிம24 மில்லியன் ஒதுக்கப்பட்டதற்கு KPKTக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் உள்ள அம்சங்களில் ஒன்றாக அறியப்படும் இந்தப் பொதுச் சந்தைக்கு ஒரு புதிய வடிவமைப்புக் கொடுக்கப்படும். மேலும் வணிகர்கள் மற்றும் பயனீட்டாளருக்கு மிகவும் சாதகமான மற்றும் வசதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
“எனவே, இந்த மறுசீரமைப்புப் பணி திட்டமிட்டப்படி தொடர, தற்காலிக இடமாற்ற உத்தரவை நிறைவேற்ற அனைத்து தரப்பினரின், குறிப்பாக வணிகர்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த போட்டியில், BETA Architects ரிம35,000 ரொக்கப்பணத்தையும் நற்சான்றிதழையும் பெற்று வெற்றி வாகை சூடியது.