ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு, புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கின் குத்தகையாளர் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு முடிவுக்குக் கொண்டு வர ஓர் உடன்பாடு எட்டியுள்ளனர்.
அண்மையில் மாநில அரசு குத்தகையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் எட்டியது, என வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.
“குத்தகையாளருக்கான ஒப்பந்தத்தை
நிறுத்துவதற்கான முன்மொழிவை மாநில அரசு சமர்ப்பித்ததது. மாநில அரசின் அதிகாரப்பூர்வக் கடிதத்திற்கு குத்தகையாளர் ஒப்புதல் தெரிவித்தனர்.
“தற்போது, ஒப்பந்தத்தை நிறைவுச்செய்வதற்கான விதிகளை நாங்கள் இன்னும் விவாதித்து வருகிறோம். எனினும், இந்தப் பிரச்சனை நீதிமன்ற சட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் சுமூகமாகத் தீர்க்கப்படும்.
“எனவே, தீப் பேரழிவுகள் காரணமாக மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள், செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட தேதி மற்றும் பல கூறுகள் குறித்து இந்த ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடத்துவோம்.
“இருப்பினும், இரு தரப்புக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் 14வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் ஐந்தாவது தவணை முதல் கூட்டத்தின் வாய்மொழி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கு தலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மாநில அரசுக்கு ரிம888,229.30 இழப்பீடு ஏற்பட்டதாக ஜெக்டிப் தெரிவித்தார்.
“இது தவிர, பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களுக்கு வழங்கப்படும் ரிம115,000.00 இழப்பீட்டுச் செலவினத்தையும் மாநில அரசு ஏற்கிறது.
“குத்தகையாளர் தரப்பு குப்பைக் கிடங்கை முறையாகப் பராமரிக்கத் தவறியதால், பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம்(எம்.பி.எஸ்.பி) ரிம59.5 மில்லியன் இழப்பீட்டை எதிர்நோக்கியது,” என்று ஜனவரி,12 அன்று புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கு தலத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர், லீ கை லூனின் கேள்விக்கு
டத்தோ கெரமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப் இவ்வாறு பதிலளித்தார்.