பொங்கல் விழா இந்தியர்களின் மரபைப் பிரதிபலிக்கும் – பேராசிரியர்

Admin

 

பிறை – “பொங்கல் விழா இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மரபைப் பிரதிபலிக்கிறது. இவ்விழா போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடுகின்றனர். எனவே இவ்விழா பினாங்கு மாநிலத்தில் அரசு மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள் மிக விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்,” என பிறை சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் இவ்வாறு தெரிவித்தார்.

மூன்று கரும்புகள் பிரமிட் வடிவில் கட்டப்பட்டு, அதற்கு நடுவில் விறகுகளுக்கு இடையில் அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களின் மேல் அலங்கரிக்கப்பட்ட மண் சட்டி வைக்கப்பட்டிருந்தது.  பிறை சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் ப.இராமசாமி மண் சட்டியில் பால் ஊற்றி பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களான டேவிட் மார்ஷல், ஜெய்சன் ராஜ்,  தாமான் சாய் லெங் பார்க் சமூக நிர்வாக மையத் தலைவர் துரைசிங்கம் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தாமான் சுப்ரிம் குடியிருப்புப் பகுதியில் ஏற்பாடுச் செய்யப்பட்ட இவ்விழாவில் அவ்வட்டார மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பொங்கல் வைக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் வெற்றிப் பெற்ற மூன்று முதல் நிலை வெற்றியாளர்களுக்கு பேராசிரியர் பரிசு எடுத்து வழங்கினார்.

மாலை மணி 6.00-க்கு தொடங்கப்பட்ட இவ்விழா ஆடல் பாடல் என அற்புதமான கலை நிகழ்ச்சியுடன் நிறைவை நாடியது.