ஜார்ச்டவுன் –வருகின்ற மே மாதம் 15-ஆம் நாள் அன்று உணவக செயல்பாடு தொடங்கவிருக்கும் உணவக உரிமையாளர்கள் மாநில அரசு விதித்துள்ள 14 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஒ.பி) விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில் இந்த எஸ்.ஒ.பி விதிமுறைகள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூறுகளை முன்னிலைப்படுத்தி அமல்படுத்துவதாகக் கூறினார்.
மாநில அரசு நிர்ணயித்துள்ள எஸ்.ஒ.பி-க்கான 14 விதிகள் பின்வருமாறு:-
* உணவகத்தில் பணிப்புரியும் அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* உணவு வளாகத்திற்குள் நுழையும் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவுசெய்ய வேண்டும்.
(தொடர்புத் தடமறிதல்)
* உணவக ஊழியர்கள் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்; வாடிக்கையாளர்கள் அணிய ஊக்குவிக்க வேண்டும்.
* பயன்படுத்தப்பட்ட அனைத்து உணவு உபகரணங்களும் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும்.
* உணவு பொருட்களான உதாரணத்திற்கு ‘சொஸ்’ உணவக பணியாளர்களால் பரிமாற வேண்டும்.
* உணவு உபகரணங்கள் பகிர்ந்து கொள்ள அனுமதிக் கிடையாது.
* உணவக இடவசதியின் 50 விழுக்காடுக்கு மேல் வாடிக்கையாளர்கள் நுழைய கட்டுபாடு மற்றும் நேரக் கட்டுபாடு பின்பற்ற வேண்டும்.
* ஒவ்வொரு மேசைக்கும் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* ஒருவருக்கொருவர் 1 மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
* ‘புஃபே’ உணவு முறைஅனுமதிக் கிடையாது.
* கைத்தூய்மி பயன்படுத்த வேண்டும்.
* பயன்படுத்தப்பட்ட தளவாடப் பொருட்களான மேசை, நாற்காலிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
* கட்டணம் செலுத்துவதற்கான சாவடியிலிருந்து ஒரு மீட்டர் இடைவெளிக்கான கோடுப் போட வேண்டும்.
* ரொக்கமற்ற பரிவர்த்தனை ஊக்குவிக்க வேண்டும்.
“ஓர் உணவகத்தை ஒரே நேரத்தில் 20 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என்றால் தற்போது 10 வாடிக்கையாளர்கள் மட்டுமே நுழைய அனுமதி என எஸ்.ஒ.பி விதிகளை ஜெக்டிப் விவரித்தார்.
எம்.பி.பி.பி தலைவர் டத்தோ இயூ துங் சியாங் அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
“ஆகவே, மே மாதம் 15-ஆம் நாள் தொடங்கி செயல்படும் அனைத்து உணவகங்களும் வரையறுக்கப்பட்ட 14 எஸ்.ஒ.பி விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்,” என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சுட்டிக்காட்டினார். இந்த எஸ்.ஒ.பி விதிகள் மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கோள்ளப்படும்.
பினாங்கு மாநில தீவுப் பகுதியின் 13 பேரங்காடிகள் மற்றும் பெருநிலத்தில் உள்ள 21 பேரங்காடிகளிலும் உள்ள உணவகங்களில் உணவு உண்ண அனுமதி வழங்கப்படுகின்றன. மேலும் தங்கும் விடுதி உணவகங்களும், கூட்டு உணவு தயாரிப்பு நிறுவன (பிரன்சாய்ஸ்) உணவகங்களும் அவ்விடத்திலே உணவு உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
சிறு மற்றும் பெரிய உணவகங்கள் செயல்பாடு கட்ட கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என செய்தியாளர் சந்திப்பில் மேலும் விளக்கமளித்தார். பினாங்கு வாழ் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை 99 விழுக்காடு பின்பற்றிய வேளையில் இந்த 14 எஸ்.ஒ.பி விதிகளையும் பின்பற்றுவர் என. இதன் மூலம் பிற உணவகங்களும் கட்டம் கட்டமாக செயல்பட வழிவகுக்கும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.