புக்கிட் மெர்தாஜாம் – “15வது மாநிலப் பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து மீண்டும் அதிகாரம் வழங்கி ஆட்சி அமைக்க துணைபுரிந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
“இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் சில இடங்களை வெல்ல தவற விட்டாலும், மக்கள் நம் அரசாங்கத்தின் மீது கொண்ட ஆதரவிற்குத் தலை வணங்குகிறேன்.
“எனவே, தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகள் அவர் தம் தொகுதிகள் முன்னேற்றத்திற்கும் மக்களின் சமூகநலன் பாதுகாக்கவும் சிறந்த சேவையாற்ற வேண்டும்,” என முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில அளவிலான ஜனநாயக செயல்கட்சியின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் இவ்வாறு கூறினார்.
“கட்சியால் பெறப்பட்ட தொகுதிகளை மக்கள் பிரதிநிதிகள் அவர்தம் பதவிக் காலத்தில் சிறந்த சேவையாற்றி மீண்டும் கட்சியிடம் அடுத்த பிரதிநிதிகள் அத்தோகுதிகளின் முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த இணக்கம் கொள்ள வேண்டும்.
இரண்டாவது முறையாக மாநில முதலமைச்சராகப் பணியாற்றும் வேளையில் இம்மாநிலத்தின் வளர்ச்சி குறிப்பாக திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்ற அல்லது தொடங்குவதற்கு உத்வேகம் கொள்வதாகக் கூறினார்.
முன்னதாக உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஐ.செ.க இன் பினாங்கு மாநில துணை தலைவருமான ஜைரில் கிர் ஜோஹாரி 2024 ஆம் ஆண்டு இம்மாநிலத்தின் ‘உள்கட்டமைப்புக்கான ஆண்டு’ என தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இம்மாநிலத்தின் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களான சிலிகான் தீவு, ஆயர் ஈத்தாம் – லிம் சோங் இயூ விரைவுச்சாலை, எம்.ஆர்.டி இரயில் திட்டம், பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம், கொடி மலை கேபள் கார் திட்டம் என செயல்படுத்த மாநிலம் அரசு உத்வேகம் கொண்டுள்ளது. இத்திட்டங்கள் சில மத்திய அரசாங்க ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்தத் திறந்த இல்ல உபசரிப்பில் ஐ.செ.க தலைவரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பினாங்கு மாநில ஐ.செ.க துணை தலைவரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப் சிங் டியோ மற்றும் ஐ.செ.க மூத்தத் தலைவருமான லிம் கிட் சியாங் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், சிங்க நடனம், போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் விழாவும் அலங்கரிக்கப்பட்டது.
மீ கோரேங், மதிய உணவு, ஐஸ் கச்சாங், பழங்கள், பானங்கள் மற்றும் பிற உணவுகளும் திறந்த இல்ல உபசரிப்பில் பரிமாறப்பட்டன.