முதல் முறையாக பினாங்கு மாநிலத்தில் இந்திய விழா 2015 கொண்டாடப்படுகிறது . இவ்விழா இந்திய உயர் ஆணையருடன் (Indian High Commission) பினாங்கு மாநில அரசு இணை ஏற்பாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நான்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்திய விழா 2015 தொடக்க விழாவில் இந்திய நாட்டைச் சார்ந்த பாரம்பரிய நடனங்கள் படைக்கப்பட்டது . இந்திய நாட்டின் கலாசேத்ரா நாட்டியக்குழுவினர் அபிநயத்துடன் படைத்த நடனங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
மேலும், இந்திய நாட்டு சோழ ஆலய புகைப்படக் கண்காட்சி, தகவல் தொழில்நுட்ப மற்றும் விண்வெளி பல்லூடக கண்காட்சி மற்றும் மலையாள திரைப்பட விழா புகழ்மிக்க பினாங்கு மாநில ஜோர்ச்டவுன் தளத்தில் நடைபெறும் என அகம் மகிழ மாநில முதல்வர் தெரிவித்தார்.
பரதக் கலை என்பது அழகு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும்
வரலாற்றின் வெளிப்பாடு என்பது அனைவரும் அறிந்ததே. அதேவேளையில் இசை, நடனம் மற்றும் கலாச்சாரம் போற்றும் உலக பாரம்பரிய மிக்க தளமான ஜோர்ச்டவுன் தளத்தில் இவ்விழா நடைபெறுவது பினாங்கிற்குச் சிறப்பைச் சேர்க்கிறது. “இந்திய சம்மர்ஸ்” எனும் தொடர் நாடகப் படப்பிடிப்புக்கு பினாங்கு மாநிலம் தேர்வுச் செய்யப்பட்டது.. இத்தொடர் நாடகத்தை UK நாட்டைச் சார்ந்த 4 மில்லியன் இரசிகர்கள் சென்னல் 4-லில் பார்த்ததாகக் குறிப்பிடப்படுகிறது . மேலும், இந்த முதல் பருவத்தில் 10பகுதி தொடர் நாடகப் படப்பிடிப்புக்கு 10 மில்லியன் பவுண் செலவிடப்பட்டதாகவும் அடுத்த பருவத்திற்கானப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி பினாங்கு மாநிலத்தில் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்திய விழா 2015 பினாங்கு மாநிலத்திற்கும் இந்திய நாட்டிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும். பினாங்கு மாநிலத்தில் ஜோர்ச்டவுன் விழா, அனைத்துலக ஜாஸ் விழா, ‘Tropfest’ குறும்பட விழா ஆகிய அனைத்துலக நிகழ்வுகள் நடைபெறும் சிறந்த தளமாக பினாங்கு மாநிலம் திகழ்கிறது.
இந்திய விழா 2015-ஐ குத்து விளக்கேற்றி மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்வை மலேசியாவில் நடைபெற ஏற்பாடுச் செய்த இந்திய ஆணையர் திரு ஶ்ரீ தி.எஸ் திருமூர்த்தி அவர்களுக்கு முதல்வர் நன்றி நவில்ந்தார்.