மலேசிய சாதனைப் புத்தகத்தில் தாயும் சேயுமான ராஜ லட்சுமி & நீத்ரா சாதனைப் பதிவு

 

நீங்கள் யோகா அல்லது யோகாசனம் என்று அழைக்கப்படும் இந்த உடற்பயிற்சி செய்வது கடினம் என கருதினால், பின்னர் 10 நிமிடங்களுக்கு மேல் அதனை தொடர்ச்சியாக எப்படி செய்வது என சிந்தித்திருக்கிறீர்களா?

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த, தாயும் சேயுமான ராஜா லட்சுமி (41 வயது) மற்றும்  நீத்ரா (14 வயது) ஆகியோர் யோகாசனத்தில்  சாதனையைப் புரிந்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இருவரும் 2020 டிசம்பர்,30 அன்று மலேசிய சாதனை புத்தகத்தில் (எம்.பி.ஆர்) நீண்ட நேரம் யோகாசனத்தை செய்ததற்காக தங்கள் பெயர்களைப் பதித்துள்ளனர்.

‘பச்சிமோத்தானாசனம்’
எனும் யோகாசனத்தை
26 நிமிடங்கள் 3 வினாடிகள் செய்து ராஜா லட்சுமி சாதனை படைத்தார். அதே வேளையில், 17 நிமிடங்கள் 14 வினாடிகள் ‘மெர்மெய்ட் போஸ்’ எனும் ஆசனத்தை செய்து நீத்ரா சாதனையைப் பதித்துள்ளார்.

யோகா பயிற்றுவிப்பாளருமான ராஜா லட்சுமி கூறுகையில், யோகா என்பது  உடற்பயிற்சி மட்டுமல்ல, அதன் தொடர்பாக அனைவருக்கும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தபோது, ​​மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக குறிப்பிட்டார்.

“யோகாவில் உள்ள ஆசனங்கள் உங்கள் உடலின் வலிமையை மேம்படுத்துவது   மட்டுமல்ல, அது ஒருவரின் மனதையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்த வித்திடும்.

“எனவே, யோகா கலையின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் எனது மகள் மற்றும் பிற யோகா மையங்களைச் சேர்ந்த எனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து எம்.பீ.ஆரில் முத்திரை பதிக்க முயற்சி செய்ய முடிவு செய்தோம்.

“எம்.பீ.ஆரில் இதுபோன்ற பதிவுகளை உருவாக்கிய முதல் மலேசியர்கள் என கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.  எனக்கு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கிய குரு ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ”என்று ராஜா லட்சுமி முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்தார்.

ராஜா லட்சுமி கூறுகையில், ஒவ்வொரு ஆசனத்திற்கும் நீதிபதி குழுவினரால் குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப  சாதனை படைத்தவர்களாகவும் தகுதியுடையவர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் ஐவரும், உண்மையில் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலவரையறையைக் காட்டிலும் கூடுதல் நேரம் அந்த ஆசனத்தைச் செய்து சாதனைப் படைத்தோம்.
உதாரணமாக ‘பச்சிமோத்தாசனம்’
என்று அழைக்கப்படும் எனது ஆசனத்திற்கு 15 நிமிடங்கள் இலக்கு நேரம் வழங்கப்பட்டது, ஆனால் நான் அதை 26 நிமிடம்  3 வினாடிகளுக்குச் செய்து சாதனைப் படைத்தேன்.

“நாங்கள் ஒரே ஆசன முறையில் சாதனையை முடிக்க வேண்டியிருந்தது, இரண்டாவது முறை முயற்சி செய்ய முடியாது.   ஆகவே, சிறிதளவு மாற்றமும் இல்லாமல் அந்தந்த ஆசனத்திலேயே முழு மூச்சாக இருந்தோம்.

“ஒரு சிறிய தவறுக் கூட எங்களை  தகுதி நீக்கம் செய்யக்கூடும். எனவே, நாங்கள் எங்கள் ஆசனத்தில் முழு கவனம் செலுத்திச் செய்தோம். அதே வேளையில், நீண்ட நேரம் ஒரே ஆசனம் செய்ததால் உடல்  தசைகளால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொண்டோம்” என்று ராஜா லட்சுமி கூறினார்.

இதனிடையே, 45 வயதான அமுதா கெளரப்பன், ஹனுமனாசனா ஆசனம் ( 25 நிமிடங்கள் 14 வினாடிகள்); நினேஹா கோபி,18   ‘One Leg King Pigeon Pose’ எனும் ஆசனம் (30 நிமிடங்கள் 8 விநாடிகள்) மற்றும்
‘Shoulder Stand Pose’ ஆசனம்
45 நிமிடங்கள் 5 வினாடிகள் பதிவு செய்த 52 வயதான முருகையா ஜி ராஜூ ஆகியோர் மற்ற மூன்று சாதனை படைத்தவர்களாவர்.

அஸ்தாங்கா யோகா கழகத்தை சேர்ந்த இந்த ஐவரும் இரண்டு மாத பயிற்சிக்குப் பின்னர் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

“ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு மணிநேரம் பயிற்சி செய்தோம்.

“எங்கள் குழுவில் இரண்டு பள்ளி மாணவர்கள் இருந்ததால் எங்கள் வேலை, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் படிப்புகளுக்கு இடையில் சமநிலைப்படுத்த வேண்டியது சவாலாக இருந்தது; அவர்களில் ஒருவர் எஸ்.பி.எம்  தேர்வு எழுதும் மாணவர் ஆவர்.

“அந்த நேரத்தில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக ஒருவருக்கொருவர் நேரடியாக சந்திக்க முடியாததால் நாங்கள் தனித்தனியாக ‘ஜூம்’  இயங்கலை வழியாக தொடர்பு கொண்டு எங்கள் பயிற்சியைச் செய்தோம்.

“யோகா மைண்ட் மாஸ்டர் எனும் மையத்தின் தொற்றுநரும் இயக்குநருமான ராஜா லட்சுமி கூறுகையில், “எந்தவொரு ஆசனங்களுக்கும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டால் யார் வேண்டுமானாலும் தேர்ச்சி பெற முடியும்.

இதற்கிடையில், மூன்று ஆண்டுகளாக யோகா கற்றுக் கொண்ட ராஜா லட்சுமியின் மகளான நீத்ரா, இக்கலையை கற்றுக்கொள்ள தனது தாயாரால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.

“யோகா பயிற்சி எனது நினைவாற்றல் சக்தியை அதிகரிக்க உதவியது, மேலும் எனது படிப்பில் சிறந்து விளங்க துணைபுரிகிறது,” என்று கான்வென்ட் கிரீன் லேன் இடைநிலைப்பள்ளியில் படிக்கும் நீத்ரா கூறினார்.

மேலும், பெற்றோர்கள் யோகாவை மற்ற துறைகளைப் போலவே ஒரு கலை வடிவமாகவும் பார்க்க வேண்டும் என்று ராஜா லட்சுமி, நம்பிக்கை தெரிவித்தார்.

“யோகா குழந்தைகளுக்கு சிறந்த மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த உதவுவதோடு கல்வியில் சிறந்து விளங்கவும் துணைபுரியும்.

“குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் யோகா பயிற்சி செய்வதன் மூலம்  இரத்த ஓட்டம் சீரடைவதோடு உடலும் ஆரோக்கியமாக இருக்கும், ”என்று 9 ஆண்டுகளாக யோகா துறையில் இருக்கும் ராஜா லட்சுமி கூறினார்.

மேலும், ராஜா லட்சுமி மற்றும் நீத்ரா ஆகிய இருவருக்கும் இந்தியாவின் பதஞ்சலி யோகா மற்றும் ஆராய்ச்சி மையம் ‘2020 அனைத்துலக சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யோகா துறையில் சிறந்து விளங்கியதற்காக ராஜா லட்சுமிக்கு ‘யுவ பாரதி’ விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில், நீத்ராவுக்கு ‘இளம் சாதனையாளர்’ விருதும் வழங்கப்பட்டது பாராட்டக்குரியதாகும்.

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற அம்மா ராஜா லட்சுமி மற்றும் மகள் நீத்ரா