பட்டர்வொர்த் – மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) எண்ணற்ற பங்களிப்புகளை மாநில அரசு அங்கீகரிக்கிறது என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
இன்று தி லைட் தங்கும்விடுதியில் நடந்த அதன் 100வது ஆண்டு விழாவில் பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்
குறிப்பிடத்தக்க பங்களிப்பை சாவ் எடுத்துரைத்தார்.
“வணிக மாநாடுகள், வணிக பிரதிநிதிகள் மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைப்பதில் பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் சிறந்த கருவியாகத் திகழ்கிறது. இது உள்ளூர் வணிகங்கள் தங்கள் வரம்பை விரிவுப்படுத்துவதற்கும் உலகளாவிய இணைப்புகளை நிறுவுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
“இந்தக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவுப் பரிசு இதழ், பினாங்கின் பொருளாதாரத்தில் பன்முகப் பங்களிப்புகளை நினைவுக்கூறுகிறது.
“இந்தச் சங்கம் திறமையான பணியாளர்களின் மதிப்பைப் புரிந்துகொண்டு, தொழில்முனைவோர் மற்றும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கானப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் பட்டறைகளையும் தொடங்கியுள்ளன.
“இந்த முயற்சிகள் வணிகத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன,” என்று சாவ் மேலும் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு நல்கி, இச்சங்கத்தை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கானத் தனது விருப்பத்தையும் இச்சங்கத்தின் தலைவரான டத்தோ
எஸ்.பார்த்திபன் தெரிவித்தார்.
“முன்னதாக, டத்தோ எஸ். பார்த்திபன் தனது உரையில், உள்ளூர் இந்திய வணிகச் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு வர பல்வேறு அரசு நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்ததற்கு முதலமைச்சர் சாவ் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்திய விவகாரங்கள் மற்றும் வளர்ச்சியில் முதலமைச்சரின் ஆதரவிற்கு டத்தோ பார்த்திபன் நன்றித் தெரிவித்தார்.
“நான் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஆண்டில் 200-லிருந்து 400 உறுப்பினர்களாக எங்கள் சங்கத்தில் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், எங்கள் அடுத்த ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு (AGM) முன்னதாக 500 உறுப்பினர்களை எட்டுவதே எங்கள் இலக்கு ஆகும்.
பினாங்கு நிலப்பரப்பில் இருக்கும் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நோக்கத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்டத்தில் புதிய அலுவலக கட்டிடம் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளோம் என்பதை முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர் விருது, மலேசிய தேசிய வணிக விருது மற்றும் சிறந்த தொழில்முனைவோர் விருது போன்ற பிரிவுகளின் கீழ் பல தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், ஒற்றுமை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத் துறைக்கான பிரதமரின் துணை அமைச்சர் எம்.குலசேகரன், செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் மற்றும் மலேசியன் அசோசியேட்டட் இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் தலைவர் (MAICCI) டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.