பிறை – வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ, மாக் மண்டின் பகுதியில் உள்ள வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் (RMM), நிர்ணயிக்கப்பட்ட கால வரையறையில் நிர்மாணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி என்று பெயரிடப்பட்ட இத்திட்டம் தற்போது 64 விழுக்காடு முழுமைப் பெற்றது, என்றார்.
“இந்த திட்டத்தில் பிரிவு ‘ஏ’ இன் கீழ் 187 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் நிர்மாணிக்கப்படும். மேலும், இது 2030 ஆம் ஆண்டிற்குள் 220,000 யூனிட் பல்வேறு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வழங்குவதற்கான மாநில அரசின் இலக்குக்கு ஏற்ப அமைகிறது.
“இத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் தரமான தரத்திற்கு ஏற்ப அமையும் என்று நம்புகிறோம்.
“வீடு என்பது மக்கள் வசிக்கும் இடமாகவும் தங்கள் குடும்பங்களைப் பாதுகாக்கும் பிரதான சொத்துக்களில் ஒன்றாகத் திகழ்கிறது,” என்று அவர் இங்குள்ள மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி வீடமைப்புத் திட்ட தலத்தைப் பார்வையிட்டபோது இவ்வாறு கூறினார்.
மேலும், பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) பொது மேலாளர், அய்னுல் ஃபாதிலாஹ் சம்சுதி மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PDC) பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, பினாங்கில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஜெக்டிப் விளக்கினார்.
அடுத்த ஆண்டு நான்காவது காலாண்டில் இத்திட்டம் நிறைவடைந்து ஆக்கிரமிப்புச் சான்றிதழைப் பெறும் என அறியப்படுகிறது.