மாணவர்கள் இந்து சமயத்தின் கவசமாக இருக்க வேண்டும் – பேராசிரியர்

Admin

Jiசெபராங் ஜெயா – பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம், பினாங்கு இந்து அகடமி, மலேசிய இந்துதர்ம மாமன்றம் மற்றும் செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய இணை ஏற்பாட்டில் அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறை (படிநிலை 2) இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் 41 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளதாக அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத் தலைவர் வழக்கறிஞர் அமரேசன் தமது வரவேற்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அர்ச்சகர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுடன் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள்

மாணவர்கள் தீயச் செயல்களில் ஈடுப்படாமல் நெறியான வாழ்க்கை வாழ இந்தப் பயிற்சி பட்டறை முக்கிய பங்கு வகிக்கும் என மலேசிய இந்துதர்ம மாமன்றத் துணை தலைவர் கிருஷ்ணன் தமதுரையில் குறிப்பிட்டார். இம்மாதிரியான சமயம் சார்ந்த நிகழ்வுகளை வழிநடத்த மாநில அரசு நல்கிய ஆதரவிற்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அடிப்படை அர்ச்சகர் பயிற்சி பட்டறையை முன்னின்று வழிநடத்தி சிறுவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் நமது இந்து மத உபதேசங்களையும் மந்திரங்களையும் போதித்து ஓர் இந்துவாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் ஆகம விதிகளையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு மலேசிய அர்ச்சகர் சங்கத் துணை தலைவர் சிவஶ்ரீ லோகநாதன் குருக்கள் கல்வி கண் திறந்து வைத்தார். இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய குருக்கள் சிவஶ்ரீ நகேந்திரனும் உடன் வழிநடத்தினார்.

இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இராமசந்திரன், மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றத் துணை தலைவர் கிருஷ்ணன் மற்றும் இந்து சமயப் பற்று கொண்ட நல்லுள்ளங்களும் கலந்து சிறப்பித்தனர்.

“மாணவர்கள் இந்து சமயத்தின் கவசமாக இருக்க வேண்டும்”, என அடிப்படை அர்ச்சகர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட பின்னர் தமதுரையில் குறிப்பிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி .

அர்ச்சகர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள்

இதனிடையே,  நம் நாட்டில் இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவர ஆலய நிர்வாகங்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் இப்பயிற்சி பட்டறை நடத்தப்படுகின்றது. நம் நாட்டிலேயே சிறந்த அர்ச்சகர்களை நாம் உருவாக்க முடியும் என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார். திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற பெரிய சமய நிகழ்வுகளுக்கு இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை கொண்டுவருவதை நிறுத்தி இங்குள்ள இளைஞர்களுக்கு வேத ஞானங்களை கற்பித்து இந்நிகழ்வுகளை வழிநடத்தவே பினாங்கு இந்து அகடமி உருவாக்கப்பட்டுள்ளதை தமதுரையில் குறிப்பிட்டார்.

மேலும், தேசிய அளவில் இந்து அறப்பணி வாரியம் அமைத்தப் பின்னர் இந்தியாவில் இருந்து அர்ச்சகர்களைக் கொண்டுவருவதன் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்நாட்டினருக்கும் அர்ச்சகர் தொழிலை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும் என பேராசிரியர்  நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, பெற்றோர்கள் பிள்ளைகளை நிபுணத்துவமிக்க தொழில் வகிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் அர்ச்சகர் தொழிலையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அர்ச்சகர் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டப்படுவதோடு நெறியான மனிதப்பிறவியாக வாழ முடியும் என அவர் மேலும் சூளுரைத்தார்.

அடிப்படை சமய  மற்றும் அர்ச்சகர் வகுப்புகளுக்கு வழிக்காட்டலாக அமைவதற்கு முறையான நூல் வடிவில் மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து  அச்சிடுவதன் தொடர்பாக இந்துதர்ம மாமன்றம், மலேசிய அர்ச்சகர் சங்கம் மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் இணைந்து அதற்கான முயற்சிகளில் விரைவில் ஈடுப்படும். இந்நூல் மூன்று படிநிலைகளில் அச்சிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழை பேராசிரியர் ப.இராமசாமி எடுத்து வழங்கினார்.

இதனிடையே, இவ்வாண்டு நவம்பர் மாத இறுதியில் பள்ளி விடுமுறையின் போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை அர்ச்சகர் பயிற்சி (படிநிலை 3) ஐந்து நாட்களுக்கு செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற செயலாளர் திரு.தனபாலனை, 016-4822879 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.