மாணவர்கள் இலவசமாக நடத்தப்படும் வகுப்புகளுக்கு மட்டம் போடமல் கலந்து நன்மைப் பெற வேண்டும் – சத்தீஸ்

Admin

 

பட்டர்வொர்த் – பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் தொடக்கவிழா கண்ட  வயலின் இசை வகுப்பை அதன் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இனிதே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்த ஏறக்குறைய 1 வருடம் கால வரையறையில் இதுவரை 6 வகுப்புகள் குறிப்பாக ஜப்பான் கணித வகுப்பு, கலை வகுப்பு, ‘கார்ட்டூன்’ வகுப்பு, ‘ரோபோதிக்’ வகுப்பு, ஓவியம் வரையும் வகுப்பு மற்றும் வயலின் வகுப்பு என இன வேற்றுமை இன்றி அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகின்றன. சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படும் இந்த அனைத்து வகுப்புகளும் முற்றிலும் இலவசம், இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர் என்றால் மிகையாகாது.

 

“வயலின் வகுப்பு மட்டுமின்றி பாகான் டாலாம் சட்டமன்ற சேவை மைய ஏற்பாட்டில் நடத்தப்படும் அனைத்தும் இலவச வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வகுப்புகளுக்குக் காரணமின்றி மட்டம் போடக்கூடாது. ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் வருகை கணக்கில் எடுக்கப்பட்டு, தக்க காரணமின்றி வருகையளிக்கத் தவறும் மாணவர்களுக்கு வருங்காலங்களில் இந்த சேவை மைய ஏற்பாட்டில் நடத்தப்படும் வகுப்புகளில் அம்மாணவர் மட்டுமின்றி பிற உடன் பிறந்தவர்களும் நிராகரிக்கப்படுவர்”, என திட்டவட்டமாக சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் தெரிவித்தார்.

கலை, இசை, தொழில்நுட்பம் சார்ந்த  வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இலவச வகுப்பு என்ற மெத்தனப் போக்கு இன்றி ஒவ்வொரு வாரமும் தவறாது வருகையளிப்பதை உறுதிச் செய்யவே இந்த முடிவு எடுப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சி-செக்‌ஷென் சமூக வடிவமைப்பு நிர்வாக இயக்குநர் சாய்னி சாய்னுல், அஸ்தெத்திக் இசை & கலை மைய தலையாசிரியர் எமிலி நீ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள வயலின் வகுப்பில் 25 மாணவர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த வகுப்பு ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.