ஜூரு – பினாங்கு மாநில அரசாங்கம் ‘கெராங்’ (கிளிச்சல்) வளர்ப்புத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதோடு மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் முறையான மேலாண்மைக் கொண்ட புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த இலக்கு கொண்டுள்ளது.
இன்று மீனவர்களைச் சந்திக்க ஜெத்தி குவால ஜுருவிற்கு வருகையளித்த பினாங்கு முதல்வரும் பத்து காவான் நாடாளுமன்ற வேட்பாளருமான சாவ் கொன் இயோவ் இதனை அறிவித்தார்.
பினாங்கில் கெராங் துறைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் திட்டம் இறுதியில் மீன்வளத்துறை மற்றும் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் உடனான பல சந்திப்புக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடலுக்குப் பின்பு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
“மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம், பேராக் மாநிலத்தில் கெராங் வளர்ப்புத் திட்டத்தை முறையான, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வெற்றிக்கரமாக மேற்கொண்டு மாதிரி திட்டத்தை வடிவமைத்துள்ளது.
பினாங்கு மாநிலத்தில் கெராங் வளர்ப்புத் துறையை மேம்படுத்த இந்த மாதிரி திட்டத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவோம்.
இந்த கெராங் வளர்ப்புத் திட்டமானது பினாங்கு மாநில மத்திய செபராங் பிறை, தெற்கு செபராங் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் தவிர்த்து வட செபராங் பிறையிலும் புதிதாக இத்திட்டம் அமல்படுத்தப்படும், என்றார்.
ஜெத்தி குவால ஜூரு கெராங் ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற தலமாகும். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் மீனவர்கள் பயனடைவதோடு கூடுதல் இலாபத்தையும் ஈட்டுவர் என முதல்வர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், குவால ஜூரு பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு தற்காலிக நில குத்தகை உரிமம் வழங்கப்படும் என
செய்தியாளர் கேட்டக் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் இவ்வாறு கூறினார்.
முதல்வர் 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே இந்த விண்ணப்பம் மறுபரிசீலனைச் செய்து ஒப்புதல் பெற்றதாக மேலும் விளக்கமளித்தார்.
அதுமட்டுமின்றி, குவால ஜூரு பகுதியைச் சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்த இணக்கம் கொண்டுள்ளதாகக் கூறினார்.
புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியூ-லியோங்; குவால ஜூரு மீனவர் பிரிவுத் தலைவர் நோர்டின் ஒஸ்மான் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.