ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் ரிம533.07 மில்லியன் என மதிப்பிடப்பட்ட 2024 வரவு செலவு பற்றாக்குறையைக் குறைக்க மாநிலத் துறைகள், முகவர்கள் மற்றும் துணை நிறுவனங்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், இந்த மாநிலத்தில் மக்களின் நல்வாழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட உயர் தாக்க திட்டங்கள் மற்றும் சமூகநல திட்டங்கள் பாதிக்காமல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“ஒரு பொறுப்பான அரசாங்கமாக, மாநில அரசு எப்போதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதேவேளையில், நீண்ட காலவரையறையில் இம்மாநிலத்தின் நிதி நிலை தொடர்ந்து குறையும் சூழல் ஏற்படுகிறது.
மாநில அரசு இம்மாநிலத்தின் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, மாநிலத்தின் பணப்புழக்கத் தேவைகளுடன் ஒப்பிடும்போது மக்களின் நலனைப் பாதிக்காத வகையில் ‘மாநிலப் பற்றாக்குறைக் குறைப்பு திட்டம்’ செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
“எனவே, மாநில நிதித் துறை, விவேகமான செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலத் துறைகள், ஏஜென்சிகள் மற்றும் துணை நிறுவனங்களின் ‘Objek Sebagai’ (OS) மீது 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான கட்டுப்பாட்டை விதித்துள்ளது,” என்று 2025 ஆம் ஆண்டிற்கான மாநில வரவு செலவு திட்டத்தைத் தயார் செய்ய பினாங்கு ஒற்றுமை அரசாங்கத்தின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக பல்வேறு ஆதாரங்கள் மூலம் புதிய வருவாயைக் கண்டறிவதற்கான பல உத்திகளையும் மாநில அரசு திட்டமிடுவதாகவும் கொன் இயோவ் கூறினார்.
“மாநில அரசாங்கத்தின் பங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்துவதாகும். ஆனால் அனைத்து திட்டங்களும் மாநிலத்திற்கு நிறைய வருவாயை அளிப்பதில்லை.
எனவே, மாநில அரசு பினாங்கு தெற்கு தீவு (பி.எஸ்.ஐ) போன்ற நிலம் தொடர்பான திட்டங்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது. அத்துடன் கிராமப்புற நிலங்களை நகர்ப்புற நிலமாக மறுவகைப்படுத்துவது மறுபரிசீலனை செய்யப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுப் பெறும்,” என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் புக்கிட் பெண்டாரா கேபள் கார் மற்றும் பி.எஸ்.ஐ போன்ற பொதுத் தனியார் கூட்டு முயற்சி (பி.பி.பி) திட்டங்களையும் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று கொன் இயோவ் கூறினார்.
“மேலும், மாநில அரசாங்கம் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான முக்கிய திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியது. ஏனெனில், இந்த தனியார் துறை மாநிலத்தின் வளர்ச்சியில் அதிகப் பங்கு வகிக்கிறது,” என்று அவர் விளக்கினார்.