மாநில அரசு உஜோங் பத்துவில் மற்றொரு மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்குகிறது

Admin
dss

பாகான் – மாநில அரசு கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியப் பிறகு, மற்றுமொரு திட்டமாக உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது.

மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு கூறுகையில், மொத்தம் 268 குடியிருப்பாளர்கள் 750 சதுர அடியில் ரிம100,000 மதிக்கத்தக்க ஒரு வீட்டைப் பெற உள்ளனர், என்றார்.

அவர்களின் தற்போதைய வீடுகளுக்கு ஈடாக இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படும் என்று சுந்தராஜூ கூறினார். இதனிடையே, உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

“உஜோங் பத்துவில் குடிமக்களுக்கான மறுமேம்பாட்டுத் திட்டத்தின் முன்மொழியப்பட்ட தளம் கம்போங் மானிஸ் மற்றும் கம்போங் மெயின் ரோட் மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

“முதல் கட்ட மேம்பாட்டுத் திட்டத்தில் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் பி2 வகை (RMMB2) கட்டிடம் அடங்கும். இதில் மொத்தம் 500 யூனிட் வீடுகள் கட்ட எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்டிடத்தில் குடிமக்களுக்கான இலவச மாற்று வீடுகளும் இடம்பெறும்.

“மொத்தம் 300 யூனிட் வீடுகள் மாற்று வீடுகளாக குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும். இதில் கடை வீடுகள்/வணிக இடம், சமூக வசதிகள் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கும்.

“இதற்கிடையில், இரண்டாம் கட்ட மேம்பாட்டில், சமூக வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வணிகக் கடை/பொது வசதிகள் ஆகியவற்றுடன் வாங்கும் சக்திக்கு உட்பட்ட C3 வகை வீடுகள் (RMC3) போன்ற கலவையான மேம்பாடு அடங்கும்,” என்று உஜோங் பத்து லோட் 20087 குடியிருப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் போது சுந்தராஜூ இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் கடிதம் (LoI) பெறுவதற்கு அடையாளமாக அவ்வட்டாரத்தைச் சேர்ந்த 30 குடிமக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கம்போங் உஜோங் பத்து எனப்படும் மாநில அரசு நிலத்தின் ஒரு பகுதியான லோட் 20087 இல் அமைந்துள்ள 15.23 ஏக்கர் நிலத்தில் உள்ள 340 ஆக்கிரமிப்புகளின் பிரச்சனை நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்தது.

கடந்த நவம்பர்,24 அன்று பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியத்தால் (LPNPP) நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் மொத்தம் 268 குடியிருப்புக் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டு, மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் மாற்று வீடுகளைப் பெற தகுதியுடையவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜு, மறுமேம்பாட்டுத் தளத்தின் இடம் பிறை நகரத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு முக்கிய சாலைகளான ஜாலான் பாகான் டாலாம் மற்றும் ஜாலான் அசெம்ப்ஷன் மற்றும் பட்டர்வொர்த் (BORR) நெடுஞ்சாலை இணைக்கப்பட்டுள்ளது.

“இந்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின் முன்மொழிவுடன், ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறன்மிக்க வீடமைப்புத் திட்டம் உருவாக்குவதன் மூலம் உள்ளூர் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

“அதே நேரத்தில், இத்திட்டத்தில் வணிக இடங்களை நிர்மாணிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். இது வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் சீரான போக்குவரத்துடன் கூடிய திட்டமிடப்பட்ட வளர்ச்சிகளை வழங்கும்.

“மாநில அரசு அதன் மக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும். சான்றாக, இந்த வீடமைப்புத் திட்டம் திகழ்கிறது.

“பினாங்கில் உள்ள ஒவ்வொரு பினாங்குவாழ் குடும்பத்திற்கும் அடிப்படைத் தேவைகள், குறிப்பாக வாழ வசதியான வீடு கிடைப்பதை உறுதி செய்வதே எனது குறிக்கோள் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எனது முக்கிய கவனம் பி40 மற்றும் எம்40 குழுவினரை இலக்காக கொண்டுள்ளது,” என்று சுந்தராஜூ மேலும் கூறினார்.

dss2

மேலும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், எல்.பி.என்.பி.பி தலைமை வணிக அதிகாரி ஃபகுராசி இப்னு உமர் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.