மாநில அரசு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க இணக்கம்

Admin
img 20240615 wa0007

 

சுங்கை பாக்காப் – நிபோங் திபாலில் அமைந்துள்ள சுங்கை கெச்சில் தோட்டத்தில் வாழும் 23 குடும்பங்கள்
10 ஆண்டுகளாக அவர்கள் எதிர்நோக்கிய நிலம் மற்றும் குடியேற்ற நெருக்கடி இறுதியாகத் தீர்க்கப்பட்டது.

பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறுகையில், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான முழுமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை உருவாக்க மாநில அரசு எடுத்த முன்முயற்சியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

பினாங்கு மாநில அரசு 1960 நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (APT) பிரிவு 4 மற்றும் பிரிவு 8ன் கீழ் 6.1462 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கத்திற்காக ரிம5.13 மில்லியனை செலவிட்டுள்ளது, என்றார்.

“முன்னதாக, இது தொடர்புடைய நிலத்தை மீட்பதற்காக, நில உரிமையாளருக்கு மாநில அரசு ரிம4.5 மில்லியன் வழங்க ஒப்புதல் அளித்தது.

img 20240615 wa0027
“ஆனால், மாநில அரசு வழங்க ஒப்புக்கொண்ட தொகையில் நில உரிமையாளர் அதிருப்தி அடைந்ததால், நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

“இந்த விண்ணப்பத்தின் மீதான நீதிமன்றத்தின் முடிவு கடந்த 2022, ஜூலை,28 அன்று பெறப்பட்டது. நில உரிமையாளர் வைத்த கோரிக்கையில் இருந்து ரிம625,651.07 நிதியிலிருந்து
ஒரு பகுதியை அதாவது மொத்தம் ரிம5.13 மில்லியன் செலுத்துமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

“கடந்த ஏப்ரல்,5 ஆம் தேதி இத்தொகைச் செலுத்தப்பட்டது,” என்று அவர் சிறிது நேரத்திற்கு முன்பு சுங்கை கெச்சில் தோட்ட 23 குடியிருப்பாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியப் போது இவ்வாறு கூறினார்.

மேலும், ​​வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தராஜூ; உள்ளூர் அரசு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெசன் எங் மோய் லாய்; சுங்கை பக்காப் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர். அமர் ப்ரிதிபால் அப்துல்லா மற்றும் தென் செபராங் மாவாட்ட (எஸ்.பி.எஸ்) அதிகாரி ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்பந்தப்பட்ட 23 குடியிருப்பாளர்கள் சுங்கை கெச்சில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் தலைமுறை என அறியப்படுகிறது.

2016 ஆம் ஆண்டில், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமிருந்து ஒரு மாதத்திற்குள் Lot 10059, GRN 158668, முகிம் 8, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்நிலத்தைக் காலியாக்கும் அறிவிப்பைப் பெற்றனர்.

அதைத் தொடர்ந்து, நில உரிமையாளர் பட்டர்வொர்த் நீதிமன்றத்தில் இருந்து அத்தோட்டத்தில் வாழும் குடிமக்கள் மற்றும் 3 ஆலயங்களும் காலி செய்ய
கடந்த 2020,செப்டம்பர்,29 தேதியிட்ட ‘Bailif’ நோட்டீஸ் (காலி உடைமை) பெற்றனர்.

நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்படும் இந்த வீடமைப்புத் திட்டம், மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சிறந்த வீட்டுவசதி மூலம் நில பயன்பாட்டை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில அரசு சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை வழங்க செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் உள்ளூராட்சி (PBT) ஆகியவற்றின் திட்ட அனுமதியின் நிபந்தனைகளுக்கு இணங்க செயல்படும்.

எனவே, இந்த சுங்கை கெச்சில் தோட்ட மக்களுக்கு, குறிப்பாக இந்த நிலத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்ற மாநில அரசின் கொள்கையை நிறைவேற்றும் வகையில், மிகவும் வசதியான மற்றும் சிறந்த குடியிருப்புப் பகுதியுடன் இவ்விடம் மேம்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“அதே சமயம், மாநில அரசு அது தொடர்பான வளர்ச்சிக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து எந்தவொரு முன்மொழிவையும் (2024, ஆகஸ்ட் மாத்திற்கு முன்) வரவேற்கிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கட்டப்படும் வீடுகள் சம்பந்தப்பட்ட 23 குடும்பங்களுக்கும் இலவசமாக ஒப்படைக்கப்படும் என்றும் மீதவுள்ள வீடுகள் ஆர்வமுள்ள வாங்குநர்களுக்கு விற்கப்படும் என்றும் சுந்தராஜு கூறினார்.

“இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே எந்த முடிவும் இறுதி செய்யப்படும்,” என்றார்.