மாநில அரசு சிறப்புக் கூட்டத்தில் 20% வரி ஒதுக்கீட்டுக்கானப் பரிந்துரையை முன்வைக்கும் – முதலமைச்சர்

Admin
f3f2c587 6ae4 4e3e 83ec 1bd62b11a826

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியாயமான ஒதுக்கீட்டின் பரிந்துரையை முன்வைக்க இணக்கம் கொண்டுள்ளது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் அனைத்து மந்திரி பெசார், மாநில முதலமைச்சர்கள் மற்றும் முதல்வர் கலந்து கொள்வார்கள் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

இந்த சிறப்பு சந்திப்புக் கூட்டம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் என அறியப்படுகிறது.

“முதலாவதாக, பினாங்கில் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரியில் இருந்து 20% வரியை இம்மாநிலத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி மேலும் விவாதிக்க பினாங்கு ஆட்சிக்குழு கூட்டம் நடத்தப்படும், என்றார்.
“ஒவ்வொரு மாநிலத்திற்கும் நியாயமான ஒதுக்கீடு அல்லது வரி வசூல் செய்வதைப் பற்றியும் கலந்துரையாடல் நடத்த உத்தேசிக்கிறோம்.

“அனைவரும் ஒப்புக்கொண்டால், இந்த விஷயத்தை மேலும் விவாதிக்க சிறப்புக் கூட்டத்திற்கு கொண்டு செல்வேன்.

“மேலும், எங்கள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும், குறிப்பாக பினாங்கிற்கு, அதிக வரி வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றாக திகழ்வதால் ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாற்றத்தைக் காண முடியும்,” என பினாங்கு சட்டமன்ற அமர்வின் போது புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக்கின் துணைக் கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.

பினாங்கு மாநிலத்தில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் ஒதுக்கீடுகளைக் கோருவதற்கான திட்டங்கள் இருக்கிறதா என கோ அறிய விரும்பினார்.
அரசியலமைப்பு சட்ட நிபுணர் பேராசிரியர் எமரிட்டஸ் டத்தோ டாக்டர் ஷாட் சலீம் ஃபாரூக்கியின் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் பினாங்கு அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்தால் இரண்டு வழிகளைத் தேர்வு செய்யலாம் என்று சாவ் மேலும் கூறினார்.
“முதலாவதாக, மத்திய அரசாங்கத்திடம் இருந்து பினாங்கு மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் 20% திரும்பப் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க திருத்தம் செய்ய வேண்டும்.

“மலேசியா நிதி ஒருங்கிணைப்புக் கொள்கையைப் பயன்படுத்தாததால் (fiscal decentralisation policy), அத்தகைய திருத்தத்திற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒப்புதல் தேவைப்படும்.
“இரண்டாவதாக, வரி வருவாயின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, இந்த விஷயத்தில் கொள்கை மாற்றத்தை உருவாக்குவதற்கான எளிதான வழியை மத்திய அரசாங்கம் தேர்வுச் செய்யலாம். ஆயினும், அனைத்து மாநிலங்களும் புதியதாக நிர்ணயிக்கப்படும் தொகைக்கு உடன்பட வேண்டும்.

“அதிக தேசியக் கடன் காரணமாக மத்திய அரசாங்கம் பல நிதிக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது என்பதை நன்கு அறிகிறேன்.

“ஆகஸ்ட் 2023 இன் இறுதியில், மொத்த மத்திய அரசின் கடன் ரிம1.15 டிரில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 62% ஆக இருந்தது, GDP-யில் 65% என்ற நிர்ணயிக்கப்பட்ட கடன் உச்சவரம்புக்குக் கீழே உள்ளது.

“இருப்பினும், இந்த ஆலோசனையை முதலில் பரிசீலனைக்கு கொண்டு வர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்,” என்று அவர் கூறினார்.