ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில சட்டமன்றத்தில் மத்திய – மாநில அரசாங்கம் இடையிலான தொடர்பு மேம்பாட்டு செயற்குழுவை நிறுவுவதன் மூலம் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று கொள்கை திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கம் ஆணையம் மற்றும் அனைத்து மாநிலங்கள் ஒருங்கிணைப்பு செயற்குழு நிறுவுதல் ஆகியவை மத்திய அரசின் ஒருங்கிணைப்பை பெற பரிந்துரைக்கப்பட்ட பிற இரண்டு திட்டங்களாகும்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதற்காக பினாங்கு மாநில அரசால் அமைக்கப்பட்ட மாநில-மத்திய அரசாங்கம் தொடர்பு சிறப்பு செயற்குழுவால் இந்தப் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டதாக, கூறினார்.
“அண்மைய காலமாக அரசியலில் ஏற்படும் நிச்சயமற்ற சூழல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்ட சவால் மக்களின் வாழ்வாதார அனைத்து அம்சங்களையும் பாதித்தது. மத்திய மற்றும் மாநில அரசாங்கம் இடையில் அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார மறுசீரமைப்பின் அவசியத்தையும் இது சித்தரிக்கிறது.
“எனவே மாநில அரசு, கல்வியாளர் டாக்டர். பிரான்சிஸ் லோ கோக் வா, புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோவ் லியோங் மற்றும் பினாங்கு இன்ஸ்திதுட் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ டாக்டர் ஓய் கீ பெங் ஆகியோர் தலைமையில் சிறப்பு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.
“இந்த சிறப்பு செயற்குழு, பினாங்கு மாநில அரசாங்கம் எதிர்கொள்ளும் மத்திய – மாநில தொடர்புகளில் ஏற்படும் ‘சிக்கல்களை’ கண்டறிவதாகும். இதில் வளங்களை நியாயமான முறையில் விநியோகம் செய்வது உட்பட இடம்பெறுகிறது,” என மாநில-மத்திய தொடர்புக்கான சிறப்புப் பணிக்குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மாநில சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாவ் இவ்வாறு கூறினார்.
மத்திய அரசின் அதிகாரப் பகிர்வு, என்பது பினாங்கு மாநில நம்பிக்கை கூட்டணிஅரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும் என்று கொன் இயோவ் கூறினார்.
“சிறந்த கொள்கையை அடையும் நோக்கில், எதிர்காலப் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான ஆயுத்தமாகவும், விரைவாகவும், வெற்றிகரமாகவும், முறையாகவும் அடையக்கூடிய அதிகாரத்தை அடையாளம் காணவும், இந்த ஆய்வை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.
“எனவே, இந்த பரிந்துரைகளை மாநில அரசு மட்டத்தில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தியில் (KDNK) பினாங்கு மாநில பங்களிப்பில் சுமார் 6.7 மற்றும் 6.9 சதவீதத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு ரிம5.2 பில்லியன் மேம்பாட்டுக்கான ஒதுக்கீட்டைக் கோரும் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சாவ் மீண்டும் வலியுறுத்தினார்.
“பினாங்கு மாநிலம் மேம்பாட்டுக்கான மொத்த ரிம75.6 பில்லியன் ஒதுக்கீட்டில் 1.3 சதவிகிதம் (ரிம996 மில்லியன்) மட்டுமே பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ”என்று அவர் சூளுரைத்தார்.
இதற்கிடையில், மாநில-மத்திய தொடர்புகளுக்கான சிறப்பு செயற்குழு வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை நாட்டிலேயே வெளியிட்ட முதல் அறிக்கையாகக் கருதப்படுகிறது என்று சியோவ் லியோங் கூறினார்.
“நியாயமற்ற அதிகாரப் பகிர்வு மற்றும் ஒதுக்கீடு பினாங்கு மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களையும் பாதிக்கக்கூடிய முக்கிய கூறாகும்.
மாநில-மத்திய தொடர்பு சிறப்பு செயற்குழுவை அமைப்பதன் மூலம், பொதுப் போக்குவரத்து, சமூகநலன், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அதிகாரம் மற்றும் நியாயமான ஒதுக்கீடு
மத்திய அரசிடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும். இது 14வது பொதுத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான மாநில அரசின் உறுதிப்பாடாகும்.