மாநில வருவாயை அதிகரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைகள் வழங்க வலியுறுத்து – ஆளுநர்

Admin
img 20240524 wa0174

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில ஆளுநர், துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக், இம்முறை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் இம்மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்கானப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

img 20240524 wa0090

அனைத்து தரப்பினரின் ஒத்துழைத்து மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் மாநிலத்தின் நிதிச் செயல்திறன் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

“பொதுவாகவே, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சிறந்த நிதிச் செயல்திறனைக் காட்டும் மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும்.

“ஏனெனில், மாநிலத்தின் உண்மையான செலவினப் பற்றாக்குறையானது மாநில ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கின் திரட்டப்பட்ட இருப்புத்தொகையின் மூலம் நிதி அளிக்கப்படுகிறது. எனவே, ஆண்டின் இறுதியில் ஒரு நேர்மறையான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்கிறது.
img 20240524 wa0177

“இருப்பினும், மாநில வருவாயில் தொடர்ச்சியான அதிகரிப்பு இல்லாவிட்டால், மாநில ஒருங்கிணைந்த வருவாய்க் கணக்கில் திரட்டப்பட்ட இருப்பு மூலம் மாநில செலவினங்களின் பற்றாக்குறையை தொடர்ந்து ஈடுகட்ட முடியாது.

“எனவே, மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களை இரட்டிப்பாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் அதே வேளையில், மாநில அரசு ‘2024 மாநிலப் பற்றாக்குறைக் குறைப்பு உத்தியை’ செயல்படுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டத்தில் மாநில ஆளுநர் இவ்வாறு கூறினார்.

அதே சமயம், கூட்டத்தொடரின் போது
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும்
விதிகள் மற்றும் ஒழுக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைவூட்டினார்.

“இதன் மூலம், அவரவரின் அரசியல் பின்புலத்தைப் பொருட்படுத்தாமல்
ஒவ்வொருவரின் மரியாதையும் நன்மதிப்பும் நிலைநிறுத்தப்படும். அதோடு, சட்டமன்ற அமர்வின் நன்மதிப்பும் பாதுகாக்கப்படும்.

“சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து மற்றும் விட்டுக்கொடுத்து செயல்படுவதன் மூலம் நல்ல தலைமைத்துவத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்,” என்று அவர் கூறினார்.

மேலும், மாநில ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அவர்கள் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களின்
தலைமைத்துவத்தைப் பாராட்டினார்.
அவரின் நிர்வாகத்தின் கீழ்
பினாங்கை சிறப்பாக வழிநடத்த உதவும் மாநில அரசாங்கத்திற்கும் புகழாரம் சூட்டினார்.

இதற்கிடையில், மாநில அரசு மற்றும் மத்திய அரசு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்த அதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது, என்றார்.

இலகு ரயில் போக்குவரத்து (LRT), பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டம், பேராக்-பினாங்கு நீர் திட்டம், உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்த பினாங்கு மாநிலத்திற்கு ஒரு பெரிய ஒதுக்கீட்டின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ முத்தியாரா சடங்கு மண்டபம் மற்றும் ஸ்ரீ பினாங்கு அரங்கம்
நடப்பு தேவைகளுக்கு ஏற்ப சிறந்த தரம் மற்றும் அழகிய வேலைபாடுகளுடன் மேம்படுத்தும் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

“ஸ்ரீ முத்தியாரா சடங்கு மண்டபம், மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ விழாக்கள் ஏற்று நடத்தும் ஒரு சடங்கு மண்டபமாக மட்டும் செயல்படவில்லை, மாறாக மாநில ஆளுநரின் மாண்பினைப் பறைச்சாற்றும் சான்றாகத் திகழ்கிறது.

முன்னதாக, ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி இங்குள்ள பினாங்கு மாநில சட்டமன்றக் கட்டிடத்தின் வளாக அருகாமையில் நடைபெற்ற மூன்று அதிகாரிகள் மற்றும் 102 உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு அணிவகுப்பில் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்.

மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லா சூ கியாங்; முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீத்; இரண்டாம் துணை முதலமைச்சர், ஜக்தீப் சிங் டியோ; ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசு துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கிய 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டம் வருகின்ற மே மாதம் 31-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.