மிடன் ஹைட்ஸ் சமூக மண்டபம் புதுப்பொழுவுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறப்பு விழாக் கண்டது– குமரேசன்

Admin
dav

பத்து உபான் – அண்மையக் காலமாக பராமரிக்கப்படாமல் இருந்த மிடன் ஹைட்ஸ் சமூக மண்டபம், தற்போது பத்து உபான் தொகுதியின் மினி நூலகம் மற்றும் சமூக மையமாக உருமாற்றம் கண்டுள்ளது.

வடகிழக்கு மாவட்டம் மற்றும் நில அலுவலகத்திற்குச் சொந்தமான இந்த சமூக மண்டபம் சமீபத்தில் ரிம30,000 பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டது என அம்மண்டபத்திற்கு வருகையளித்த போது பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் குறிப்பிட்டார்.

“இந்த இடம் முன்பு ‘மிடன் ஹைட்ஸ் கவாசன் ருக்கூன் தெத்தாங்கா’ (கே.ஆர்.டி மைண்டன் ஹைட்ஸ்) உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அது சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதை அறிந்த பிறகு, மாவட்ட மற்றும் நில அலுவலகத்திடம் இம்மண்டபத்தைப் புதுப்பிக்கும் திட்டத்தை முன்வைத்தேன்.

இந்த மண்டபத்தில் கூரையை சரிசெய்தல், சாயம் பூசுதல் மற்றும் வேலிகளை சரிசெய்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக, அத்துமீறல் மற்றும் பொது உடைமைகளை சேதப்படுத்துதல் போன்ற வழக்குகள் இங்கு இடம்பெற்றன. எனவே, பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாங்கள் வேலி அமைக்க வேண்டியிருந்தது”, என குமரேசன் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.

வடகிழக்கு மாவட்ட பெங்குலு மொஹமட் தாஜுதீன் ராம்லி பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் முன்னிலையில், தாமான் பிராவுன் கிராம சமூக செயல்முறை கழகம் (எம்.பி.கே.கே) தலைவர் சந்திரபிரேமாவிடம் அதிகாரப்பூர்வ கடிதத்தையும் மாதிரி சாவியையும் ஒப்படைத்தார்.

இந்த மண்டபத்தில் வசதிகளை மேம்படுத்தவும் உள்துறை வடிவமைப்பு பணிகளை மேம்படுத்தவும் சில தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக குமரேசன் கூறினார்.

“குடியிருப்பாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இம்மண்டபத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் இணையத்தள வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், புத்தகங்கள், புத்தக அலமாரிகள் மற்றும் பிற தேவையான பொருட்களை பங்களிக்க விரும்புவோர் தனது சேவை மையத்தை 04-656 2605 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளவும்”, என கேட்டுக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் கட்டிடத்தின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தன, ஆனால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக, இம்மண்டபம் தாமதமாக ஒப்படைக்கப்பட்டது என்று மொஹமட் தாஜுதீன் கூறினார்.

dav