பினாங்கு மாநில முதல் மின்னியல் நூல்நிலையம் மாநில அரசின் முயற்சியில் கீய்சய்ட் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இ&ஒ நிறுவனம் மற்றும் டைம் ஒத்துழைப்புடன் கட்டப்படவிருப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
தாமான் பிரி ஸ்கூல் அருகில் இருக்கும் மிக பழமையான புஸ்பானிதா கட்டிடத்தை மின்னியல் நூல்நிலையமாக மாற்றியமைக்க இப்புதிய திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. சுமார் ரிம 2.5 கோடி செலவில் இப்புதிய கட்டிடம் கட்டப்படவிருப்பதாக மேலும் விவரித்தார் மாநில முதல்வர். 3000-க்கும் மேற்பட்ட மின்-புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகை குறிப்புகள் இடம்பெறும் இப்புதிய மின்னியல் நூல்நிலையத்தில் மாணவர்கள், சிறியவர்கள் மற்றும் பெரியோர் என கற்று பயன் பெறலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆதிக்கத்தில் கட்டப்படும் இந்நூல்நிலையம் இளைய தலைமுறையினரிடையே கற்கும் ஆற்றலை மேலோங்க ஊந்து கல்லாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இளைய தலைமுறையினரிடையே புத்தாக திறனை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் திறக்கப்பட்ட பினாங்கு அறிவியல் கஃபே போன்று இந்த மின்னியல் நூல்நிலையமும் நன்மையைப் பயக்கும் என்பது திண்ணம். இத்திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடைந்து அதிகாரப்பூர்வ திறப்பு விழாக்காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்வழி, பினாங்கு மாநிலத்தை அறிவார்ந்த வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிரகடனப்படுத்த முடியும் என்பது வெள்ளிடைமலை.