மீண்டும் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இந்து அறப்பணி வாரியத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றார். பேராசிரியரின் தலைமையில் 11 ஆணையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்து அறவாரியத் துணை தலைவராக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன் மற்றும் வாரிய செயலாளராக திரு சுரேந்திரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்.
மாநில அரசாங்கம் நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் முஸ்லிம் அல்லாத அனைத்து மதத்தினரும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்துவதாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் தெரிவித்தார். பினாங்கு அரசின் கீழ் செயல்படும் இந்து அறப்பணி வாரியம் இந்துக்களின் சொத்துகள் மற்றும் ஆலயங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுவதாக மாநில முதல்வர் குறிப்பிட்டார் .
வாரிய நிர்வாகக் குழு நியமன விழா சில அதிகாரப்பூர்வ அலுவல்கள் காரணமாக தாமதமாக இடம்பெற்றதாக பேராசிரியர் கூறினார். இந்த ஆண்டு ஆணையாளர்கள் பட்டியலில் திரு காளியப்பன் புதிய அங்கத்தினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2008-ஆம் ஆண்டு இந்து அறப்பணி வாரியத்தை மாநில அரசாங்கம் கைப்பற்றும் போது அதன் பொறுப்பில் 3 ஆலயங்கள் மட்டுமே இருந்ததாகவும் இன்று 8 ஆலயங்கள் இடம்பெறுவதாக பேராசிரியர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக உபகாரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரிம630 000 நிதி ஒதுக்கீடுச் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.