மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் தடுப்பூசி மையத்திற்குச் செல்ல இலவச போக்குவரத்து

Admin

பினாங்கு மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்மாநிலத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு இலவச போக்குவரத்து சேவைகளை வழங்கி தங்கள் பங்களிப்பை  தொடங்கியுள்ளனர்.

“பத்து உபான் சேவை மையம், கம்போங் நிர்வாக செயல்முறை கழகம் (எம்.பி.கே.கே) மற்றும் தன்னார்வலர்கள் இணை ஏற்பாட்டில் இந்த இலவச போக்குவரத்து சேவை வழங்குவதாக,” அதன் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இவ்வாறு கூறினார். 

இந்த இலவச போக்குவரத்து சேவை பிரத்தியேகமாக மூத்த குடிமக்கள்; தனித்து வாழ்பவர்கள்; போக்குவரத்து வசதி இல்லாதவர்கள் மற்றும் பத்து உபான் தொகுதியில் வாழ்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

இலவச போக்குவரத்து சேவை நாடுபவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னதாக முன் பதிவு செய்யுமாறு அழைக்கப்படுக்கின்றனர்.

“பொது மக்கள் Mysejahtera செயலியில் அடிக்கடி கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான சந்திப்பு நிலையை சரிப்பார்க்க வேண்டும். இது கோவிட்-19 தொற்று நோய் பரவல் சங்கிலை உடைக்க துணைபுரியும்,” என குமரேசன் வலியுறுத்தினார். 

இதற்கிடையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்  ஆர்.எஸ்.என் இராயர் அவர்களை பேட்டி கண்டபோது, எதிர்காலத்தில் தடுப்பூசி மையங்களுக்கு மக்களை சுயமாக கொண்டு செல்ல இணக்கம்  கொண்டுள்ளதாக, கூறினார்.

“இது அனைவரும் தடுப்பூசி போட ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி, போக்குவரத்து இன்றி தவிக்கும் மூத்த குடிமக்கள் அல்லது தங்கள் குழந்தைகளுடன் வசிக்காதவர்களுக்கும் இந்த போக்குவரத்து சேவை சுகாதாரமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது.

புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியாவ் லியுங், சமூகத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான போக்குவரத்து பிரச்சினை குறித்து எப்போதும் அக்கறை கொண்டுள்ளார்,  குறிப்பாக 

இந்த காலகட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி மையங்களுக்கு அவசியம் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

“எனது அலுவலகம் இத்திட்டத்தில் பங்கேற்க ஒரு மாதத்திற்கு முன்பு முதல் மிகுந்த ஆர்வம் கொண்டேன். மேலும், அதிகம் பாதிக்கக்கூடிய குழுக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியைப் பெற உதவுவதில் எங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது.

“இதுவரை, மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர் பிரிவைச் சேர்ந்த 70 பேர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கப்பட்டது.

“எனது தொகுதி மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக, அவர்களுக்காக சிறந்ததைச் செய்வேன். ஒரு வகையில், தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குகிறேன்,” என்று முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த  தொலைபேசி நேர்காணலின் போது இவ்வாறு கூறினார்.

மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு இத்திட்டம் சிறந்த நன்மை அளிக்கிறது என பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் ஆ தியோங் கூறினார்.  ஏனெனில், சில சமயங்களில் அவர்களின் வீடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள தடுப்பூசி மையங்களில் பதிவு இடம்பெறுகின்றன.

“இதுவரை, பத்து  லஞ்சாங் தொகுதியில் 30 பேர்களுக்கு உதவியுள்ளோம். மேலும், ஒவ்வொரு நாளும் அதிகமான கோரிக்கைகளைப் பெற்று வருகிறோம். இத்திட்டம் செயல்படுத்த எனது அலுவலக மேற்பார்வையில் ஏழு வாகனங்களை தயார் செய்துள்ளோம். இந்த போக்குவரத்து ஏற்பாடு நிச்சயமாக அவர்களின் சுமையை குறைக்க உதவுகிறது,” என  ஓங் கூறினார்.

சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சிவூ கிம், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வழங்க வேண்டும். இச்செயல் அவர்கள் பொது மக்களின் மீது காட்டும் அக்கறை மற்றும் பொறுப்புணர்ச்சியைப் புலப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைவதாகக் கூறினார்.  

“போக்குவரத்து சேவை வழங்குவதைத் தவிர, சுங்கை பினாங்கு தொகுதியில் இந்நோய் தாக்கத்தால் பாதிப்புக்கு இலக்கான குழுக்களுக்கும் தடுப்பூசி திட்டத்தில் பதிவு செய்ய  உதவியுள்ளோம்.

“இதுவரை, எட்டு மூத்த குடிமக்களுக்கு உதவியுள்ளோம், எதிர்காலத்தில் மேலும் உதவுவோம்,” என்று முத்துச் செய்திகள் நாளிதழிடம் லிம் கூறினார்.

கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ் லீ சுன் கிட் மற்றும் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் சூன் சியாங் ஆகியோர் இத்திட்டத்தை சிறந்த முறையில் வழி நடத்துவது பாராட்டக்குறியது.