ஜார்ச்டவுன் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு மாநில அருள்நிலையம் ஏற்பாட்டில் அனைத்துலக யோகா தினம் 2022 பினாங்கு யூத் பார்க் திடலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் கலந்து சிறப்பித்தார்.
ஐந்தாவது முறையாக நடைபெற்ற இந்த அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் குறிப்பாக சிறுவர்கள் கலந்து பயன்பெற்றனர். காலை 6.00 மணிக்கு தொடக்கம் கண்ட யோகா பயிற்சிக்கு அவ்வட்டார மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது என மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத் தலைவர் திரு.தனபாலன் குறிப்பிட்டார்.
“யோகா வளமான வாழ்வுக்கு வழிவகுப்பதோடு ஆரோக்கியமான நல்லெண்ணங்களை உருவாக்க உத்தேசிக்கிறது, என இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய் கூறினார்.
“மேலும், இது பினாங்கு மாநில அரசின் பினாங்கு2030 ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் இலக்கு மற்றும் துரித வளர்ச்சியுடன் அறிவார்ந்த மாநிலமாக பிரகடனப்படுத்த சிறந்த மையக்கல்லாக அமைகிறது,” என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் இயோவை பிரதிநிதித்து கலந்து கொண்டு தமது உரையில் இதனை குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ரிம7,000 வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு வாழ் மக்கள் யோகாவை ஒரு நாள் மட்டும் செய்யாமல் தினமும் பயிற்சி எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார். இம்மாதிரியான யோகா பயிற்சி திட்டங்களுக்கு மாநில அரசு தொடர்ந்து நல்லாதரவு வழங்குவதன் மூலம் பொதுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வை மேலோங்க செய்ய இயலும் என வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் ந.தனபாலன், நோயற்ற வளமான வாழ்க்கைக்கு யோகாசனம் சிறந்த மருந்தாக திகழும் என குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் இந்நிலையத்தின் கீழ் தொடர்ந்து வழிநடத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். கோவிட்-19 காலக்கட்டத்தில் இயங்கலை வாயிலாகவும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் யோகா பயிற்சியை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்க இணக்கம் பூண்டுள்ளது. கூடிய விரைவில் தமிழ்ப்பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்த இணக்கம் கொண்டுள்ளது.
மேலும், மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலைய அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 7.30 முதல் இரவு 8.30 வரை யோகா வகுப்புகள் நடத்தப்படுகிறது. 5 வயது முதல் பெரியவர் வரை ரிம30 மட்டுமே மாதாந்திர கட்டணமாக விதிக்கப்படுகிறது. யோகா பயிற்சி வகுப்பில் பங்கெடுக்க விரும்புபவர் மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத்தை அணுகலாம்.