வீடு வாங்குவதில் சட்டவிரோத கும்பலிடம் ஏமாற வேண்டாம்- ஜெக்டிப் சிங்

பினாங்கு மாநிலத்தின் பொறுப்பு, ஆற்றல், வெளிப்படை கொள்கையின் கீழ் அமல்படுத்திய குறைந்த விலை வீடுகள் திட்டம் மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. குறைந்த விலை வீடுகள் வாங்கும் திட்டத்தில் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பப் பாரங்களை அனுப்பி வருகின்றனர். இம்மாதிரியான நிலையில் வீடு வாங்க விண்ணப்பித்தவர்களிடம் குறைந்த விலை வீடுகளை தங்களால் வாங்கித் தர முடியும் என உத்தரவாதம் அளிக்கும் சட்டவிரோத கும்பலிடம் ஏமாற வேண்டாம் என பினாங்கு வாழ் மக்களுக்கு நினைவுறுத்தினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.

சட்டவிரோத கும்பல் மீது கொடுத்த புகார் கடிதத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்.
சட்டவிரோத கும்பல் மீது கொடுத்த புகார் கடிதத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ, கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்.

கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர் மாநில அரசு வரையறுத்த விதிமுறைக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். எட்டு அதிகாரிகள் அடங்கிய அக்குழுவினர் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வுச் செய்வர். விண்ணப்பங்களின் அனைத்து செயல்முறையும் விதிமுறைக்கு உட்படுத்தியே பரிசீலனைச் செய்யப்படும் என மேலும் தெளிவுப்படுத்தினார். அண்மையில் சட்டவிரோதமாக சில நபர்கள் ரிம10,000 முதல் ரிம 13,000 வரை பணம் கொடுத்தால் இலகுவாக வீடு வாங்கி தருவதாக கூறி ஏறக்குறைய ஏழு பேர் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடுமையாகச் சாடினார் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ.
பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங்கிடம் நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் ஜாலான் பத்தானியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதோடு, பினாங்கு வீடமைப்பு அலுவலகமும் பிரத்தியேகமாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் என குறிப்பிட்டார் திரு ஜெக்டிப். மூவர் அடங்கிய அக்கும்பலை காவல்துறையினர் விரைவில் கைதுச்செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் இம்மாதிரியான சட்டவிரோத கும்பலால் பாதிக்கப்பட்டிருந்தால் வீடமைப்பு அலுவலகத்தையோ அல்லது காவல்துறையினரையோ நாட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும்,பொது மக்களிடம் சொந்த வீடு வாங்க உத்தரவாதக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் முறையான அணுகுமுறையைப் பின்பற்றி தங்களின் சொந்த வீட்டை வாங்கும் கனவை நனவாக்கவும் என மேலும் கேட்டுக் கொண்டார்.