வெள்ளி இரத ஊர்வலத்தை ஏற்று நடத்திய நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய மீதான நடவடிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்படும் – இராமசாமி

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு  முன்னதாக அறிவித்தது போல பொது மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கி தைப்பூசக் கொண்டாட்டம் மற்றும் இரத ஊர்வலத்தை தடை செய்த உறுதிப்பாட்டினை மீண்டும் நிலைநிறுத்துகிறது.

இருப்பினும், இன்று நாட்டுக்கோட்டை செட்டியார்  ஆலய நிர்வாகம் பினாங்கில் அதிகாலையில்  வெள்ளி இரதத்தின் ஊர்வலத்தை ஏற்று நடத்தியது. இச்செயல்  மாநில அரசின் கொள்கை; பினாங்கு இந்து அறப்பணி வாரிய அறிவிப்பு; மற்றும் தேசிய பாதுகாப்பு மன்ற ஆணைக்கு எதிர்ப்பாக அமைகிறது. 

எனவே, செட்டியார் ஆலய நிர்வாகத்தின் இச்செயல் சட்டவிரோத செயலாகவே கருதப்படுகிறது. எனவே, இந்நிர்வாகத்தின் மீது அதிகார மேலாண்மை தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கூறினார். 

“தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம்,  வெள்ளி மற்றும் தங்க இரதங்களையும் உள்ளடக்கிய இரத ஊர்வலங்கள் என அனைத்து கொண்டாட்டங்களையும் தடைச்செய்யும் முடிவினை முன்னதாகவே எம்.கே.என். பினாங்கு இந்து அறப்பணி வாரியம்,  செட்டியார் ஆலய நிர்வாக  பிரதிநிதிகள், பினாங்கு சுகாதாரத் துறை, காவல் துறை ஆகிய தரப்பினருடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்தின் ஒரு மித்த முடிவாகும். இந்த தீர்மானத்திற்கு நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய பிரதிநிதிகளும் கலந்து ஒப்புதல் அளித்ததையும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார். 

இம்முடிவு அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான எடுத்த முன்முயற்சி, என்றார். 

இன்று அதிகாலையில் செட்டியார் ஆலய நிர்வாகம் நடத்திய வெள்ளி இரத ஊர்வலம் மாநில அரசு மற்றும் எம்.கே.என் அறிவித்த தைப்பூசக் கொண்டாட்டத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை (எஸ்.ஓ.பி) மீறியதை மிக வெளிப்படையாகக் காண்பிக்கிறது. 

இதுவரை எம்.கே.என் தரப்பிலிருந்து தைப்பூச இரத ஊர்வலங்கள் நடத்துவதற்கான அனுமதி கடிதம் எதுவும் பினாங்கு மாநில அரசு பெறவில்லை, என இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், சத்தீஸ் முனியாண்டி; ஆர்.எஸ்.என். இராயர் (ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் இந்து அறப்பணி வாரிய  மற்றும் தண்ணீர் மலை ஆலய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

முன்னதாக, எம்.கே.என் கடுமையான எஸ்.ஓ.பி அறிவித்து பத்துமலை முருகன் ஆலய  இரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

எனவே, பத்து மலை ஆலயம் பெற்ற அனுமதியின் அடிப்படையில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயமும்  மனிதவளத் துறை அமைச்சர் எம்.சரவணன் அலுவலகம் மூலம் கூட்டரசு அரசாங்கத்தின் உதவியை  கோரியுள்ளது என்பது தெள்ள தெளிவாகிறது. 

மேலும் கருத்து தெரிவித்த பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி,  செக்‌ஷன்4, இந்து அறப்பணி வாரிய சட்டத்தின் (Seksyen 4 Ordinan Wakaf Hindu) கீழ் சம்பந்தப்பட்ட ஆலயம் தவறு இழைக்க நேரிடும் போது அந்த  ஆலயத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றும் உரிமை இருக்கிறது, என்றார். 

நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலய நிர்வாகத்தின் இச்செயல், பொது மக்களின் சுகாதாரத்தை புறக்கணிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இராயர் வருத்தம் தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை இந்தியர்கள் மட்டுமல்ல, பினாங்கு மக்களை ஒட்டுமொத்தமாகப் பாதிக்கக்கூடும்.  ஏனெனில், இந்த தொற்றுநோயிக்கு (கோவிட்-19) இனம்,  மதம், பேதம் தெரியாது என சாடினார்.