ஃபெடரல் ஓட்ஸ் மில்ஸ் ரிம135 மில்லியன் முதலீட்டில் அதிநவீன வசதியை அறிமுகப்படுத்தியது

ஜுரு – தென்கிழக்கு ஆசியாவில் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் ஓட்ஸ் நிறுவனமான ஃபெடரல் ஓட்ஸ் மில்ஸ், சிம்பாங் அம்பாட்டில் 260,000 சதுர அடி பரப்பளவில் அதன் புதிய அதிநவீன ஆலையை திறந்துள்ளது.

இந்த நிறுவனம் தற்போது உலகளவில் ஓட்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் 13வது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.

FOM நிறுவனம் அதன் அதிநவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் வியூக முதலீடு செய்துள்ளது. இந்தப் புதிய ஆலை ரிம135 மில்லியன் முதலீடு மூலம் பலவிதமான ஓட்ஸ் தயாரிப்புகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றதுள்ளது.

FOM ஒரு மணி நேரத்திற்கு 10 மெட்ரிக் டன் மற்றும் வருடத்திற்கு 60,000 மெட்ரிக் டன் தயாரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOM நிறுவனத்தின் விரிவாக்கம் பினாங்கு மாநிலம் நிலையான முதலீட்டுத் தலமாக திகழ்வதைச் சித்தரிக்கிறது என்று ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு ஜேசன் ஹெங் மூய் லாய் தெரிவித்தார்.

“பினாங்கின் சாதகமான சூழல், தொழில்துறை வீரர்கள் பங்கேற்கவும், முதலீடுச் செய்யவும் அனுமதிக்கிறது. அதேவேளையில், மாநிலத்தின் நல்வாழ்வுக்கும் சாட்சியமளிக்கிறது.
“எதிர்வரும் ஆண்டுகளில் FOM நிறுவனம் அதிக முன்னேற்றங்களை அடையும் என நம்பிக்கைக் கொள்கிறேன்.

“இது தவிர, இந்தப் புதிய நிறுவனத்தினால் இயந்திரங்களை இயக்கும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் நிர்வாகப் பணியாளர்கள், தளவாடப் பணியாளர்கள் மற்றும் திறமையான வல்லுநர்கள் வரை நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று எங் புதிய நிறுவனத்தின் திறப்பு விழாவின் போது தனது உரையில் கூறினார்.

இதற்கிடையில், FOM இன் துணை நிர்வாக இயக்குனர் மைக்கல் சியூ கியான் ஹொங், FOM நிறுவனம் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதன் தயாரிப்புகளை வலுப்படுத்தி, சிறந்த தயாரிப்புகள் வழங்க இணக்கம் கொண்டுள்ளது.
1970 ஆம் ஆண்டில், அதன் ஸ்தாபனத்திற்குப் பிறகு, FOM நிறுவனம் அதன் ஐகானிக் கேப்டன் பிராண்டை அறிமுகப்படுத்தியது. இது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றி, FOM அதன் உலகளாவிய ஏற்றுமதி தடயத்தைப் படிப்படியாக விரிவுபடுத்துவதற்கு வழி வகுத்தது. இதனால் உலகம் முழுவதும் உள்ள 30 நாடுகளில் கேப்டன் ஓட்ஸ் என பெயர் பெற்றது.
இந்நிறுவனம் தற்போது சவுதி அரேபியா, ஈரான், பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் பிற நாடுகளுக்கு ஓட்ஸ் ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, பினாங்கு முதலமைச்சரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர் டத்தோஸ்ரீ லீ கா சூன், FOM நிர்வாக இயக்குனர் செவ் சூ எங் மற்றும் இன்வெஸ்ட்பினாங்கின் தலைமை செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.