ஜோர்ஜ் டவுன்- MC எனப்படும் நிர்வாக நிறுவனமும் JMC எனப்படும் இணை நிர்வாக நிறுவனமும் ஏற்கவேண்டிய, அடுக்குமாடி வீடுகளின் தர மேம்பாட்டுப் பணிக்கான செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பினாங்கு மாநில அரசு மக்களை மகிழ்விக்கும் ‘Housing Assistance Programme of Penang, Yes’ ( HAPPY ) என்றழைக்கப்படும் மகிழ்ச்சித் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக மக்கள் கூட்டணி அரசு, நடப்பு வீடமைப்பு நிதிக்கு மேலும் ரிம 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.
மத்திய அரசு குறைந்த விலை அடுக்குமாடி கட்டடங்களையும் நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகளையும் மறுசீரமைக்க பத்தாம் மலேசியத் திட்டத்தின் கீழ் ஒரே மலேசியா பராமரிப்பு நிதி Tabung Penyenggaraan 1 Malaysia (TP1M) என்ற பெயரில் ரிம 500 மில்லியன் மானியம் ஒதுக்கீடு செய்துள்ளது நாம் அறிந்ததே. இந்தச் சீரமைப்பு உதவித் தொகையின் மூலம் மத்திய அரசு, குறைந்த விலை அடுக்குமாடி வீடுகளின் 90% சதவிகித சீரமைப்புச் செலவுகளையும் நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகளின் 70% சீரமைப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும். மீதமுள்ள 10% மற்றும் 30% செலவை நிர்வாக நிறுவனங்களான JMB/MC/ குடியிருப்புக் கழகம் ஆகியவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாடாங் கோத்தா நகர மண்டபத்தில் நடைபெற்ற அடுக்குமாடிக் கட்டட நிர்வாகக் கருத்தரங்கின் தொடக்க விழாவின்போது முதல்வர் தெரிவித்தார்.
முதல்வரின் கருத்துப்படி, பெரும்பான்மையான நிர்வாக நிறுவனங்கள் இந்தச் சீரமைப்பின் மீதச் செலவை ஏற்றுக் கொள்வதில் பெரும் சவாலை எதிர்நோக்கினர் எனலாம். எனவேதான், இம்மகிழ்ச்சித் திட்டத்தின்வழி பினாங்கு மாநில அரசு பினாங்கில் உள்ள அனைத்து குறைந்த விலை மற்றும் நடுத்தரவிலை அடுக்குமாடி வீடுகளைச் சீரமைக்க உதவ முன் வந்துள்ளது. இலாபகரமான வரவுசெலவு கணக்கின் வெளிப்பாடே இம்மகிழ்ச்சித் திட்டமாகும். 2008-ஆம் ஆண்டு ரிம 88 மில்லியன், 2009-ஆம் ஆண்டு ரிம 77 மில்லியன், 2010-ஆம் ஆண்டு ரிம 33 மில்லியன் மற்றும் 2012-ஆம் ஆண்டு ரிம 50 மில்லியன் இலாபத்தைப் பினாங்கு மாநிலம் ஈட்டியுள்ளது. எனவேதான், இத்திட்டம் எந்த மாநிலத்திலும் இதுவரை அமல்படுத்தாத தன்னிகரற்ற ஒரு சீரான திட்டமாகக் கருதப்படுகிறது. மக்கள் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பினாங்கு அடுக்குமாடி வீடுகளின் பராமரிப்புக்காக ஒவ்வோர் ஆண்டும் ரிம 10 மில்லியன் மானியம் அதாவது முந்தைய மாநில அரசு வழங்கிய மானியத்தைவிட பத்து மடங்கு கூடுதலாக வழங்குகிறது என்று சுட்டிக்காட்டினார்.
இம்மகிழ்ச்சித் திட்டம் பினாங்கில் அமையப்பெற்றிருக்கும் அனைத்து மலிவு விலை அடுக்குமாடி வீடுகளின் பொது வசதிகள் பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை வெற்றியடைய செய்யும் என முதல்வர் லிம் நம்பிக்கை தெரிவித்தார். அதுமட்டுமன்றி, இத்திட்டம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வசதிமிக்கதாய் உயர்த்தும் எனவும் கூறினார்.
இத்தொடக்க விழாவில், முதல்வருடன் பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஹஜ்ஜா பத்தாஹியா, சட்டமன்ற உறுப்பினர்களான திரு வொங் ஹொன் வாய், டத்தோ அப்துல் மாலிக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.