பத்து உபான் – பினாங்கு வாழ் மூத்தக்குடிமக்களை அங்கீகரிக்கும் வகையில் பத்து உபான் வட்டாரத்தைச் சேர்ந்த 4544 மூத்தக்குடிமக்களுக்கு ரிம150-க்கான ரொக்கப்பணம் நிதியுதவியாக வழங்கப்பட்டன. மாநில அரசின் சமூகநலத்திட்டங்களில் ஒன்றான மூத்தக்குடிமக்களுக்கு வழங்கும் நிதியுதவி இந்த ஆண்டு ரிம130 இருந்து ரிம150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
“பொது மக்கள் குறிப்பாக 60-வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள், மூத்தக்குடிமக்களுக்கான நிதியுதவி பெற அடுத்த ஆண்டு தொடக்கம் அனைவரும் மின்னணு நிதி பரிமாற்றம் (EFT) வாயிலாக நிதியுதவிக்கானத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்வில் நிதியுதவிப் பெற வருகையளித்த பொது 80-க்கும் மேற்பட்ட கம்போங் நிர்வாக செயல்முறை கழக உறுப்பினர்கள் உதவிக்கரம் நீட்டினர். மேலும், பொது மக்களுக்கு குறிப்பாக மூத்தக்குடிமக்களுக்கு மின்னணு நிதி பரிமாற்றம் பாரம் பூர்த்திச் செய்வதற்கும் துணைப்புரிந்தனர்,” என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் இவ்வாறு கூறினார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மூத்தக்குடிமக்களுக்கானப் பாராட்டு விழாவில் கம்போங் நிர்வாக செயல்முறை கழக உறுப்பினர்களுடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட வடகிழக்கு மாவட்ட அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிகழ்வில், சமூகநலம், சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ அவர்களும் கலந்து கொண்டார்.
“கடந்த ஆண்டு இந்த மூத்தக்குடிமக்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கொம்தார், மலாயான் வங்கியில் நடத்தப்பட்டது. இருப்பினும் பத்து உபான் வட்டார பொது மக்கள் குறிப்பாக மூத்தக்குடிமக்கள் தூரமாகப் பயணிப்பதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு இந்நிகழ்வு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின், டேவான் உத்தாமா பெலாஜார் பி, அரங்கில் நடத்தப்பட்டது, என்றார்.
இந்நிகழ்வு இந்த அரங்கத்தில் நடத்தப்படுவதன் மூலம் பொது மக்கள் சுலபமாக இவ்விடத்திற்கு வருகையளிப்பதற்கு இலவச ‘கேட்’ பேருந்து சேவை, இலகுவான வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளுடன் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கூறினார். மேலும், இந்த அரங்குக்கு ரிம4,500 வாடகையை தனது சொந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கியதாக மேலும் கூறினார். அடுத்த ஆண்டு தொடக்கம் மூத்தக்குடிமக்களுக்கு மின்னணு நிதி பரிமாற்றம் வாயிலாக நிதியுதவி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது, இதன் மூலம் மூத்தக்குடிமக்கள் நீண்ட தூரம் பயணிப்பதையும் நீண்ட வரிசை நிற்பதையும் தவிர்க்கலாம் என நிதியுதவிப் பெற்றுக்கொண்ட திரு செல்லம், 74 முத்துச்செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இந்நிதி சிறு உதவித்தொகையாக இருந்தாலும் மூத்தக்குடிமக்களுக்கு அர்த்தமுள்ள நிதியுதவியாகவே கருதப்படுகிறது. இந்நிதி
மூத்தக்குடிமக்கள் போன்ற எங்களுக்கு மருத்துவச் செலவினத்திற்கும் பயனளிப்பதோடு எங்களின் சேவைக்காக மாநில அரசு வழங்கும் அங்கீகாரம் என நிதியுதவிப் பெற்றுக்கொண்ட உடன்பிறப்புகளான இரா.குணசேகரன், 70 மற்றும் இரா.சரஸ்வதி,67 கூறினர்