அந்நிய வர்த்தகர்கள் இந்நாட்டில் வியாபார வாய்ப்பு பெற்றுக் கொள்ளலாம் தவிர சில்லரை வியாபாரத்தில் ஈடுப்பட அனுமதி இல்லை என அரசாங்க நியாயமான வர்த்தகக் கொள்கை நன்கு புலப்படுத்துகிறது. இருப்பினும். கடந்த சில ஆண்டு காலமாக அந்நிய வர்த்தகர்கள் இம்மலேசிய நாட்டின் பல மாநிலங்களில் “அனைத்துலக இந்தியர் விழா” என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்விழாவை மலேசிய தனியார் நிறுவணம் ஏற்று நடத்துகிறது. இவ்விழாவில் இந்தியர்களின் பாரம்பரிய ஆடைகள், பெண்களுக்கான ஆபரணங்கள், இனிப்புப் பலகாரங்கள் ஆகியவை விற்கப்படுகிறது.
அந்நிய வர்த்தகர்கள் பண்டிகை காலமான தீபாவளி, நோண்புப் பெருநாள் போன்ற விழாக் காலங்களில் வியாபாரத்துறையில் ஈடுபடுவதால் உள்நாட்டு வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு அடைகின்றனர். ஏறக்குறைய ரிம 40 மில்லியன் பணத்தை அந்நிய வர்த்தகர்கள் இலாபமாகப் பெற்று வெளிநாட்டுக்குக் கொண்டு செல்கின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும். .
உள்நாட்டு வர்த்தகத்தில் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதிலும் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் 16-7-2013 ஒரு நாள் கடையடைப்புச் செய்யப்பட்டது. இதில் அனைத்து வர்த்தகக் கடைகள், தங்க நகை விற்பனை மையங்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிய வர்த்தகர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் ‘லிட்டல் இந்தியா’ என்று அழைக்கப்படும் மார்க்கேட் ஸ்திரீட் பகுதியில் பினாங்கு இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தின் தலைவர் திரு வசந்தன் தலைமையில் வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பினாங்கு மாநிலத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக இந்த அந்நிய வர்த்தகம் நடைபெறுவதாகவும் இதனால் மார்க்கேட் ஸ்திரீட் பகுதியில் இடப்பெற்றிருக்கும் 140 வர்த்தகக் கடைகளும் பெறும் நஷ்டம் அடைவதாக பினாங்கு இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சேதுபாண்டியன் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு வர்த்தகர்கள் வருமான வரி, தொழிலாளர் ஊதியம், கடை வாடகை, மின்சார கட்டணம் மற்றும் பல சுமைகளைச் சுமப்பதால் அவர்களால் அந்நிய வர்த்தகர்களைப் போல் மிகக் குறைவான விலையில் விற்க இயலவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அந்நிய வர்த்தகர்கள் குறுகிய நாட்களிலே கூடுதலான லாபம் ஈட்டி வெளிநாட்டிற்குக் கொண்டு செல்வதால் உள்நாட்டு வர்த்தகர்கள் மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கதாகும். வர்த்தகத்துறையில் நீண்ட காலம் ஈடுபட்டுள்ள வீ.கே.என் உரிமையாளர் திரு பி இராமலிங்கம் இந்த அந்நிய வர்த்தகத்தால் 30% முதல் 40% இலாபத்தை தாம் இழப்பதாகத் தெரிவித்தார்.
பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரான மதிப்பிற்குறிய சாவ் கொன் யாவ் மார்க்கேட் ஸ்திரீட் பகுதிக்கு வருகையளித்து, உள்நாட்டு வர்த்தகர்களின் பிரச்சனையைக் கண்டறிந்து உதவுவதாக வாக்குறுதியளித்தார். பினாங்கு இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்க உறுப்பினர்கள் மாநில அரசு உதவி கரம் நீட்டுவர் என பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.
கடந்த 17-7-2013-ஆம் நாள் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் அவர்கள் “அனைத்துலக இந்தியர் விழா” ஏற்பாட்டு குழுவினருடன் கலந்துரையாடி அந்நிகழ்வை தைம் சுகுவேர் என்ற பேரங்காடியில் நடத்தாமல் பிசா அரங்கில் நடத்த அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஏனெனில் இந்த பிசா அரங்கம், தைம் சுகுவேர் இடத்தைக் காட்டிலும் லிட்டல் இந்தியா பகுதிக்கு தூரமாக அமைவதாக சாவ் கொன் யாவ் தெரிவித்தார். மேலும் 10 நாட்களுக்கு நடைபெற வேண்டிய இந்த நிகழ்வை 5 நாட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்றார். இந்த பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் பொருட்டு மத்திய அரசு உள்நாட்டு வர்த்தக அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.