அனைத்துப் பள்ளிகளிலும் சமய வகுப்பு கட்டாயப் பாடத்திட்டமாக செயல்படுத்த வேண்டும் – தர்மன் பரிந்துரை

கெபூன் பூங்கா – “நமது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைக்க ஏற்ப அனைத்துப் பள்ளிகளிலும் சமய வகுப்புகள் நடத்த இணக்கம் கொள்ள வேண்டும். அதேவேளையில், அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் இந்து சமய வகுப்பு கட்டாயப் பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

“சமய வகுப்பு ஒரு மாணவனை சிறந்த பண்புநெறியுடன் வளர்வதற்குத் துணைபுரிகிறது. அதோடு அவர்கள் தீயப் பழக்கங்களில் இருந்து விடுப்படவும் சமயம் ஒரு திறவுக்கோளாகத் திகழ்கிறது. எனவே, மத்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்,” என்று புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் விவேக நாயகன் திரு.தர்மன் தெரிவித்தார்.

“இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள் என்பதற்கு ஏற்ப இம்முறை நடத்தப்பட்ட இந்த விழாவினை ஏற்று நடத்த சிவகுரு என்ற இளைஞருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இளைஞர்களும் தலைமைத்துவ மாண்பினை பொறுப்பேற்க வேண்டும்,” என வலுயுறுத்தினார்.

இந்தத் திருமுறை ஓதும் போட்டியில் ஆறு முதல் 18 வயகுட்பட்ட 180 மாணவர்கள் கலந்து கொண்டனர். இது இந்து மதம் சார்ந்த சமயம் அடிப்படையிலான வருடாந்திரப் போட்டியாகும். இந்தப் போட்டி தேசிய அளவில் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்படுவது பாராட்டக்குரியதாகும்.

இந்தப் போட்டியில், தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், மேடை பேச்சுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என சமயம் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.

மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 45-வது திருமுறை ஓதும் விழா ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் ராம்கர்பால் சிங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சேர்லினா அப்துல் ரஷிட், தஞ்சோங் பூங்கா வேட்பாளருமான ஜாய்ரீல் கீர் ஜோஹாரி, எம்.பி.பி.பி கவுன்சிலர் காளியப்பன், மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருமுறை ஓதும் போட்டி முதலில் வட்டார ரீதியில் நடத்தப்படும். அதில் வெற்றிப் பெறும் மாணவர்கள் மாநில ரீதியிலானப் போட்டியில் கலந்து கொள்வர். இப்போட்டியில் வெற்றி வாகைச் சூடும் மாணவர்களே தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்படுவர் என அறியப்படுகிறது.

இந்து சமயத்தைப் பறைச்சாற்றும் இந்த திருமுறை ஓதும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பங்கேற்பு அதிகரிப்பதைக் கண் கூடாக காண முடிகிறது.

மேலும், மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை ஒவ்வொரு ஆண்டும் சமயம், கல்வி, சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்துகிறது. இந்தப் பேரவை தொடர்ந்து சமூகத்திற்குச் சேவை ஆற்றுவது சாலச்சிறந்தது.