தாசெக் குளுகோர் – இந்த ஆண்டு பினாங்கு மாநில அளவிலான அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு 10,000 ஜூம்பா நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு ‘நாட்டில் ஜூம்பா நடனத்தின் மிகப்பெரிய பங்கேற்பை’ பதிவு செய்து இன்று மலேசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இன்று நடைபெற்ற விழாவில் மலேசிய சாதனை புத்தக ஆலோசகர் சித்தி நூர்ஹானிம் முகமது நோ என்பவரிடம் இருந்து முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் விருதைப் பெற்றுக் கொண்டார்.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் அனைவரும் ஊதா நிற ஆடை அணிந்து மிட்தவுன் பெர்டா குபாங் மெனெரோங் எனும்
தலத்தில் நடைபெற்ற ஜூம்பா நடனத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பினாங்கு மாநில அளவில் 11வது முறையாக மகளிர் தினம் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு மாநில முதல்வர் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநில அரசு, மகளிர் தொடர்ந்து அனைவராலும் பாதுகாக்கப்படுவதையும், வழிநடத்தப்படுவதையும், நேசிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான வசதிகள் மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் முன்னுரிமை அளித்து ஆதரவு வழங்குகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு அறிமுகப்படுத்தப்பட்ட பாலின சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து கூறுகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை உறுதி செய்கிறது.
மாநில அரசு பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) மூலம் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கான பாலினச் சமத்துவக் கொள்கை மற்றும் பாதுகாப்பான குடும்பக் கொள்கையை அமலாக்கம் செய்து பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
கடந்த 2022, டிசம்பர் மாத நிலவரப்படி, அனைத்து 40 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுக்கள் (JPWK)பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப பொருளாதாரம், குடும்ப விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் 605 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
PWDC தலைமை நிர்வாக அதிகாரி ஓங் பீ லெங் கூறுகையில்,ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மகளிர் திறந்த வெளியில் ஜூம்பா நடனம் ஆடத் தயங்குவார்கள். ஆனால் தற்போது சூழ்நிலையே மாறிவிட்டது என்று அவர் கூறினார்.
“கடந்த காலங்களில் அவர்கள் தங்கள் அறையில் அல்லது வீட்டில் மட்டுமே ஜூம்பா நடனம் ஆடினார்கள். இப்போது, அவர்கள் வெளியே சென்று ஜூம்பா நடனம் ஆடத் தயாராக உள்ளனர். அவர்கள் தைரியசாலிகள். இது ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும் மிக முக்கியமான மாறுதல் என்றால் மிகையாகாது,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், முதலாம் துணை முதலமைச்சர், டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ ஹாஜி அப்துல் ஹலிம், மாநில செயலாளர் டத்தோ முகமது சாயுத்தி மற்றும் சோங் எங்; சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு
மார்ச், 11 முதல் 12 வரை இரண்டு நாட்களுக்கு தொழில்முனைவோரின் தயாரிப்புகள் மற்றும் படைப்புகளை விற்பனைக்குக் காட்சிப்படுத்த கார்னிவல் நடத்தப்படுகிறது என்று சோங் எங் கூறினார்.
மேலும், இந்த கார்னிவலில் வர்ணம் தீட்டும் போட்டி, கேரம் மற்றும் சதுரங்கப் போட்டி மட்டுமின்றி கார் மற்றும் குளிரூட்டி பழுதுபார்க்கும் பட்டறைகள் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே, பொது மக்கள் இந்த கார்னிவலில் பங்குபெற்று பயன்பெறுமாறு சோங் எங் கேட்டுக் கொண்டார்