ஜார்ச்டவுன் – மகளிருக்கான அதிகாரமளிக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறுவதை உறுதிசெய்ய நல்வாழ்வு, வாழ்க்கைத் தரம் மற்றும் மகளிரின்ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
“மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நுராய்னி அகமட்டின் சமீபத்திய அறிக்கை எனது கவனத்தை ஈர்த்தது. அந்த அறிக்கையில் இளம் பருவப் பெண்கள் ஆண்களை விட மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“கூடுதலாக, மலேசியாவில் மகளிரிடையே கர்ப்பப்பை புற்றுநோயானது நான்காவது பொதுவான புற்றுநோயாக இடம்பெறுவதாக மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தகவல் மையத்தின் தரவுக் காட்டுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1,740 புதிய வழக்குகள் மற்றும் 991 இறப்புகள் பதிவாகின்றன என்பது கவலைக்குரிய உண்மையாகும்.
“மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் இந்த குறிப்பிடத்தக்க ஆபத்து இருப்பதால், மன வலிமை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு மகளிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவ்வப்போது சுகாதார சோதனைகள் மேற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
“மாநில அரசு இந்த முன்முயற்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதிசெய்ய சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு குழு உறுப்பினர் வாயிலாக செயல்படுகிறது,” என இன்று கொம்தாரில் நடைபெற்ற 2025 அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அரசு அலுவலகங்கள், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று சாவ் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டுக்கான அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் ” வெற்றி அடைதல்” என்பதாகும். இக்கருப்பொருள் மாநிலத்தின் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. மகளிருக்கான நியாயமான உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்காகப் போராடுவதில் நீண்ட காலமாக முன்னணியில் இருக்கும் பினாங்கு மாநில அரசு, இம்மாநில மகளிர் உறுதியான மற்றும் படைப்பாற்றல் மிக்க நபர்களாகவும் சமூகமாகவும் உருமாறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
“பினாங்கில் மகளிருக்கான வாய்ப்புகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், குரல் எழுப்புவதற்கும், முடிவெடுப்பதற்கும், இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் ஒரு தளமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
“அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மற்றும் ஆதரவுடன், பினாங்கு தொடர்ந்து சாதனைப் படைக்கும். மகளிர் முன்னேறுவதையும், மதிக்கப்படுவதையும், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அங்கீகரிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் என்று நான் நம்புகிறேன். நாம் ஒன்றிணைந்து பாதுகாப்பான, வெளிப்படையான, நியாயமான மற்றும் முற்போக்கான மாநில அரசாங்கத்தை உருவாக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகப் பொருளாதார பேரவையால் வெளியிடப்பட்ட 2024 உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், மலேசியாவின் நிலை 12 இடங்கள் குறைந்து, தற்போது 146 நாடுகளில் 114 வது இடத்தைப் பிடித்துள்ளது.
” மலேசியா 0.668 மதிப்பெண்களுடன், இன்னும் 1.0 என்ற சிறந்த மதிப்பெண்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இது முழு பாலின சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இந்த அறிக்கையின்படி, மலேசியாவின் நிலை சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளை விட குறைவாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத் தலைவர் டத்தோ ஓங் பீ லெங், பினாங்கு மேம்பாட்டுக் கழக இயக்குநர்கள், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பங்குப்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு துணை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பேரங்காடிகள் உட்பட 40 க்கும் மேற்பட்ட அமைப்புகளிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில அரசு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் இம்மாநிலத்தில் மகளிரின் பங்களிப்புக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.