பிறை – பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரிராணி பட்டு இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார் என பினாங்கு ஐ.செ.க தலைவர் சாவ் கொன் இயோவ் கூறினார்.
மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிய பத்து காவான் நாடாளுமன்ற நம்பிக்கை கூட்டணி கட்சியின் பிரச்சாரத்தில் கஸ்தூரிராணி இல்லாதது குறித்து பல தரப்பினரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க கொன் இயோவ் இவ்வாறு கூறினார்.
“அமெரிக்க லத்தீன் அதாவது பிரேசில் அல்லது அர்ஜென்டினாவில்
நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
“இந்த வார தொடக்கத்தில் மாநாடு நடைபெறுவதால், அவர் அடுத்த வாரம் பத்து காவானுக்குத் திரும்புவதாகவும், நம்முடன் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்ய உதவுவதாகவும் அவர் கூறினார்,” என்று முஸ்தபா உணவகம் அருகே சந்தித்தபோது சாவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கின் முதல்வரான சாவ் கொன் இயோவ், கடந்த மூன்று நாட்களாக நடைபெறம் பிரச்சாரத்தில் பத்து காவானில் உள்ள சமூகத்திடம் இருந்து ஆமோக ஆதரவு பெறுவதாகக் கூறினார்.
“வேட்பாளர் நியமனம் செய்யப்பட்ட உடனே புக்கிட் தம்புன் மாநில சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கி, பின்பு பிறை மற்றும் புக்கிட் தெங்கா தொகுதி வரை தொடர்ந்து நடத்தினோம்.
“ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒரு தொகுதிக்குச் செல்வதில் கவனம் செலுத்துகிறோம். மேலும், இந்த பிரச்சாரக் காலக்கட்டத்தின் முடிவில் நாங்கள் முடிந்தவரை பல பகுதிகளுக்குச் செல்வோம். ஏனெனில், பத்து காவான் நாடாளுமன்றம் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது.
மூன்று நாட்கள் பிரச்சாரத்தின் போது குடியிருப்பாளர்கள் தன்னிடம் எழுப்பிய பிரச்சனைகளில் வசதிக் குறைந்த மற்றும் உடல்பேறு குறைபாடுள்ளவர்களுக்கு சமூகநலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்று கொன் இயோவ் கூறினார்.
“சட்டமன்ற சேவை மையங்கள் மற்றும் கிராம சமூக மேலாண்மை கழகங்கள் (MPKK) இந்த புகார்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்று நம்புகிறோம்.
“மேலும், ஒரு சில குடியிருப்பாளர்கள் நிலம் தொடர்பான பிரச்சனைகளை குறிப்பாக பெர்கம்போங்கான் ஜூருவில் எழுப்பியுள்ளனர்.
“மேலும், குடியிருப்பாளர்கள் மற்றும் வாக்காளர்களை முடிந்தவரை அணுகி, வாக்களிக்க செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். ஏனெனில், தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு முக்கியமான தருணமாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.
முஸ்தபா உணவகத்தில் காலை உணவுக்குப் பிறகு, கொன் இயோவ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் தாமான் சாய் லெங் பார்க்கில் உள்ள உணவகங்கள், அங்காடி கடைகள் மற்றும் பொது மக்களை சந்திக்க பயணித்தனர்.