அன்பான சமூகத்துடன் நற்பணி திட்டத்தின் மூலம் வசதி குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு

 

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேர வட்டாரரப் பேரவை சமூக நலப்பிரிவு ஏற்பாட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘அன்பான சமூகத்துடன் நற்பணி’ எனும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

“ஆறாது முறையாக நடத்தப்படும் இத்திட்டம் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் வருடாந்திர திட்டமாக இது அமைகிறது. 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இவ்வட்டார சேவை மையத்திற்கு உதவியை நாடி வரும் பி40 குழுவைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் காணப்படுகின்றனர். ஓர் ஆண்டில் இரு முறை குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளிப் பண்டிகை காலத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுகிறது,”என புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவையின் தலைவர் தர்மன் வரவேற்புரையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், கல்வி நிதியுதவி, மருத்துவ நிதியுதவி ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன. தீபத் திருநாள் கொண்டாட்டம் வருகின்ற அக்டோபர் 27-ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 30 வசதிக் குறைந்த குடும்பங்களுக்குப் மளிகைப் பொருட்கள் பரிசுக்கூடையாக வழங்கப்பட்டன என மேலும் கூறினார்.

மேலும், ஷான் மற்றும் இராமகிருஷ்ணா ஆதரவற்ற இல்ல குழந்தைகள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புப் பணம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் காளியப்பன் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் முனியாண்டி, மின்னல் குடும்பக் கழக தலைமை நிர்வாக இயக்குநர் சிவா நாயர், தங்சோங் பினாங்கு, தெஸ்கோ நிர்வாக பிரதிநிதி பெருமாள் நாயுடு மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சமூகநலத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நல்கி வரும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டு நினைவிச்சின்னம் வழங்கப்பட்டன.