ஜார்ஜ்டவுன் – மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த தனியார் துறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பினாங்கு மாநில அரசு இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மாநில முதல்வர் சாவ் கொன் யாவ், பினாங்கு பொருளாதாரத்தை வலுப்படுத்தி தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்குவதை உறுதிச் செய்வதற்காக, அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றார்.
“மாநில அரசிடம் பெரிய வளங்கள் இல்லை, ஆனால் ஒதுக்கீடு (வளங்கள்) தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் (மாநில அரசு) உறுதிச் செய்வோம்.
“எங்களிடம் 15 இலக்கு குழுக்கள் உள்ளன, மேலும் பினாங்கு மக்கள் உதவித் திட்டம் (மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட RM75 மில்லியன் மதிப்புடையது) குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என பொருட்படுத்தாமல் 400,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.
“அனைத்து பினாங்கு வாழ் மக்களின் பிரச்சனைகளையும் நான் புரிந்துகொள்கிறேன், எந்த குழுவாக இருந்தாலும், அனைவருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் அரசாங்க ஆதரவு தேவை. மேலும், இதுவரை அளிக்கப்பட்ட உதவி போதுமானதாக இருக்காது என்பதை நான் அறிவேன், ஆகவே, பொருளாதாரம் வலுப்படுத்த தொடர்ந்து வேலை வாய்ப்புகளை வழங்குவதை உறுதிச் செய்வதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், ஒரு தொழிலை உருவாக்குவதற்கும், இதனால் அவர்களின் குடும்பங்களின் பராமரிப்பிற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,” என தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் தமது நிலைப்பாட்டினைக் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பாக, மாநில அரசு பினாங்கு வட்டி இல்லாத தொழில் கடனுதவிக்கு ரிம30 மில்லியன் சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு உதவ ஒதுக்கியுள்ளது. தொடர்ந்து, முதல்வர் அலுவலகம் பினாங்கு தொழில் முனைவோர் சங்கங்களான பினாங்கு கிளையின் மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (எஃப்.எம்.எம்) மற்றும் மாநில வணிக அமைப்பு போன்றவற்றிற்கும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட அழைத்து விடுத்துள்ளது.
அதே செய்தியாளர் சந்திப்பில் மாநில அரசு கோவிட்-19 நிதியத்திற்கு ரிம300,000 நன்கொடையாகப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநில உதவித் திட்டம் ஏப்ரல் மாதத்தில் சம்மந்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த மாநில அரசு துறை முகவர்கள் விரைவாக அதற்கான பணியில் ஈடுப்படுமாறு மாநில முதல்வர் சாவ் கோரிக்கை விடுத்தார்.