ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து இளைஞர் பேரவை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர்.
“இளைஞர்கள் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு சாரா இயக்கங்கள், இளைஞர் பேரவை போன்ற அமைப்புகளில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். ஏனெனில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
இளைஞர் பேரவையில் இணைவதற்கான வயது வரம்பு 30 என நிர்ணயித்துள்ளது. இந்தச் சட்டம் வருகின்ற 2026 ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது,” என மாநில முதலமைச்சர் சாவ் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக் கூட்டத்தில் நடப்பு இளைஞர் பேரவைத் தலைவர் யுவராஜன், துணை தலைவர் பொய்கை வீரன், செயற்குழு உறுப்பினர்களான புவனேஸ்வரன், பூஜா அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களின் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்த போது யுவராஜன், 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மாநில ஜூனியர் இந்து அமைப்பின் (HYO) கீழ் இணைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“நாங்கள் பள்ளி மட்டத்திலிருந்தே இளைஞர்களுக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணிகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றில் ஈடுபடுவதைப் பற்றி கற்பிக்க விரும்புகிறோம்.
மேலும், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் அண்மைய அறிவிப்பு இளைஞர் சார்ந்த சங்கங்களில் உறுப்பினர்களாக இணைவதற்கு வயது வரம்பை 30 ஆக (18 முதல் 30 வயது வரை) குறைத்துள்ளது. இதனால் உறுப்பினர்களைச் சேர்ப்பது இன்னும் சவாலாக மாறியுள்ளது. முன்னதாக அதன் வயது வரம்பு 40ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் பேரவையின் துணைத் தலைவரான யுவராஜன் கூறுகையில், மாநிலத்தில் 28 கிளைகளைக் கொண்ட இந்து இளைஞர் பேரவை (HYO)
1,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது.