அரசு துறை நிறுவனங்களில் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்க முழு ஆதரவு -சொங் எங்

Admin

ஜோர்ச்டவுன் வருகின்ற ஜனவரி, 2019 முதல் அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் குழந்தை பராமரிப்பு மையம் அமைப்பதற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக பேம்பாட்டுத் துறை அமைச்சர் கூடிய விரைவில் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்க வலியுறுத்துகிறார்.

பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் பணிப்புரியும் இடத்தில் பராமரிப்பு மையம் அமைப்பதன் மூலம் அவர்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலை களைய வழிவகுக்கும். குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் பாதுகாப்பானப் பராமரிப்பு மையத்தை அணுகவே விரும்புகின்றனர்,” என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

குழந்தை பராமரிப்பு மையம் நிறுவுவதன் மூலம் பணிப்புரியும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிச்செய்வதோடு மன நிறைவுடன் வேலையில் கவனம் செலுத்த முடியும். இதன் வழி அரசாங்கத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக்கக்கூடும்.

மேலும், குழந்தை பராமரிப்பு மையம் நிறுவுவதற்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு கிடைக்கப்பெற்றால் அரசாங்க நிறுவனங்களில் கூடுதலான பராமரிப்பு மையம் அமைக்கப்படும்..

இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஒங் பீ எங் கலந்து கொண்டார்.

தற்போது மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் Taska D Komtar’ எனும் குழந்தை பராமரிப்பு மையம் இயங்குகிறது என சுட்டுக்காட்டினார். இந்த மையத்தில் 30 குழந்தைகள் இடம்பெறுகின்றனர்.

பினாங்கு மாநில அரசு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துறை அமைச்சுடன் இணைந்து பினாங்கில் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்க ஒத்துழைப்பு நல்கும் என கூறினார்.