பத்து காவான், சங்காட் மற்றும் புக்கிட் மின்யாக் நகரங்களை ஒன்றிணைத்து மேம்படுத்தப்பட்டு “செத்லைட் நகரமாக” உருமாற்றும் முயற்சியில் அஸ்பேன் குரூப் நிறுவனம் முன்வந்துள்ளது. பினாங்கு மேம்பாடுக் கழகம் மூன்று மாத காலத்திற்கு நடத்திய ஆய்வு ஒன்றில் பொது மக்கள் வாக்குகள் மூலம் இந்நகரங்களை “செத்லைட் நகரமாக” உருமாறும் என அஸ்பேன் விஷன் சிட்டி அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார்.
அஸ்பேன் விஷன் சிட்டியின் முதல் கட்ட பணியாக வட மலேசியாவின் முதல் இகியா (IKEA ) பல்பொருள் அங்காடி ரிம200 கோடி செலவில் நிறுவப்படவுள்ளது. இதன் கட்டுமான வேலைகள் 2018-ஆம் ஆண்டு நிறைவடையும் என தாம் நம்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் . இத்திட்டத்தில் கோலாம்பியா ஆசியா தனியார் மருத்துவமனை, உயர்கல்வி மையம் மற்றும் நட்சத்திர தங்கும்விடுதி என பல்வேறு அமைப்புகள் நிறுவப்படவுள்ளதாக மேலும் அவர் விவரித்தார். இம்மாதிரியான மேம்பாடுகளின் வழி பத்து காவான் நகரத்தை அனைத்துலக மற்றும் அறிவார்ந்த நகரமாக பிரகடனப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தில் வர்த்தகம் மற்றும் குடியிருப்பு வசதி என பல்வேறு உள்ளடக்கியுள்ளது. சுமார் 200 ஹெக்டர் நிலப்பரப்பில் 11,800 மலிவுவிலை வீடுகள் இன்னும் 10 முதல் 15 ஆண்டுக்குள் கட்டப்படவிருப்பது பாராட்டக்குறியதாகும். அஸ்பேன் விஷன் சிட்டி அடிக்கல்நாட்டு விழாவில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என அதிகமானோர் கலந்து சிறப்பித்தனர்.}